போஸ்டர் செய்தி

3,186 போலீசாருக்கு பொங்கல் பதக்கங்கள்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Spread the love

சென்னை, ஜன. 14–

பொங்கல் பண்டிகையையொட்டி 3,186 போலீசார் மற்றும் தீயணைப்பு, சிறை ஊழியர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் (ஆண், பெண்) காவலர் நிலை–1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல்பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகியநிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2020 பிப்ரவரி 1–ம் தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

6 அதிகாரிகளுக்கு…

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய்படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள்மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் இப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சரால் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *