செய்திகள்

31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை: சட்டசபையில் அமைச்சர் காமராஜ் பெருமிதம்

சென்னை, செப்.16–

இந்த ஆண்டு 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

இன்று கேள்வி நேரத்தில் ஒரத்தநாடு தும்பத்திக்கோட்டை ஊராட்சியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்டப்படுமா என்று தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறினார்.

நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு தாமதமாகிறது. இதனால் கொள்முதல் செய்ய தடை ஏற்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைச்சர் காமராஜ் பதிலளிக்கையில், தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு சாதனை ஆண்டாகும். 31 லட்சத்து 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. முன்பு 23 லட்சம் டன் தான் அதிகளவாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இப்போது கொள்முதலில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறோம்.

முன்பு அதிகபட்சமாக 1808 கொள்முதல் நிலையங்கள் தான் இருந்தன. ஆனால் இப்போது 2132 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தேவை என்றால் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

24 மணி நேரத்தில் பணம்

மேலும் கொள்முதல் செய்த நெல்லுக்கு 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க அம்மா அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா காலத்திலும் மார்ச் 24–ந் தேதிக்கு பிறகு 11 லட்சத்து 32 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தனியாருக்கு சட்டக்கல்லூரி

நாகப்பட்டினம் அருகே திருச்சியில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருவதால் நாகப்பட்டினத்தில் புதிய சட்டக்கல்லூரி துவங்க வாய்ப்பில்லை என்று உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேட்ட கேள்விக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார்.

ஏற்கனவே 7 சட்டக் கல்லூரிகள் இருந்தது. இப்போது மேலும் 6 சட்டக்கல்லூரிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம், தர்மபுரி, தேனி உட்பட பல்வேறு பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த கல்லூரி துவங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.100 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி கேட்டால் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *