ஆசிரியர்கள் கைது
சென்னை, ஜூலை 29–
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஜூலை 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை போராட்டம் தொடங்கியுள்ளது. சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். மாணவர்களின் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை நுங்கம்பாக்கம் பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட தொடக்கக் கல்வி ஆசியர்கள் சங்க கூட்டமைபினர் வந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்திற்கு வந்த ஆசியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூறுகையில், தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்த படி திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இதற்காக எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தில் தயாராவோம். கடந்த 60 ஆண்டுகளாக ஒன்றிய அளவில் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அரசு திடீரென மாநில முன்னுரிமையை அமல்படுத்தியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 90 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்தவித பதிலோ, நடவடிக்கையும் இல்லை என்று கூறினர்.