செய்திகள்

300 நாற்காலிகளை தூக்கிச்சென்ற மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ

மும்பை, மார்ச் 27–

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத் தொகுதியில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ, கட்சி அலுவலகத்தில் இருந்த 300 நாற்காலிகளை எடுத்துச் சென்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சில்லோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அப்துல் சட்டார், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் என்பதால் மக்களவைத் தேர்தலில் ஔரங்காபாத் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட்டு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுபாஷ் சம்பத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆதரவாளர்களுடன் காந்தி பவனில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்துல் சட்டார், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த 300 நாற்காலிகளை எடுத்துச் சென்றார்.

இதுகுறித்து அப்துல் சட்டார் கூறுகையில், “கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள் எனக்கு சொந்தமானவை. கட்சி கூட்டங்களுக்காக நான்தான் 300 நாற்காலிகளை வாங்கினேன். தற்போது அந்த கட்சியிலிருந்து நான் விலகிவிட்டேன். அதனால், நான் வாங்கி போட்ட நாற்காலிகளை எடுத்து வந்துவிட்டேன். புதிதாக தேர்தலில் போட்டியிடுபவர், நாற்காலிகளை வாங்கட்டும்” என கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சுபாஷ் சம்பத் கூறுகையில், “அப்துல் சட்டாருக்கு நாற்காலிகள் தேவைப்பட்டிருக்கலாம். அதனால், நாற்காலிகளை எடுத்து சென்றுவிட்டார். இதனால் நாங்கள் அதிருப்தி அடையவில்லை. அவருடைய ராஜினாமா கடிதத்தை நாங்கள் ஏற்காததால், அவர் இன்னும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *