செய்திகள்

30 தாக்குதல் ரக ட்ரோன்கள்: அமெரிக்காவிடம் வாங்கும் இந்தியா

டில்லி, நவ.17–

இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பற்படை பயன்பாட்டுக்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா விரைவில் வாங்கவுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:–

‘எம்.க்யூ.-9பி ரக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்கள்) வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. அந்தப் பரிந்துரையானது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்படும்.

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களில் இருந்து ஏவ முடியும். அத்தகைய ட்ரோன்களை வாங்குவதற்கான விலை, அதில் இணைக்கப்பட வேண்டிய தளவாடங்கள் உள்ளிட்டவை தொடர்பாக அமெரிக்காவிடம் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது.

நடப்பு 2021–-22ம் நிதியாண்டிலேயே இந்தக் கொள்முதல் நிறைவேற்றப்படும். அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 ட்ரோன்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ட்ரோன்கள் வானில் தொடர்ச்சியாக 35 மணி நேரம் வரை பறக்கக் கூடியவை. கண்காணிப்பு, உளவு அறிதல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தல் உள்ளிட்ட பணிகளில் அந்த ட்ரோன்களை ஈடுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *