செய்திகள்

எகிப்து நாட்டிலிருந்து 3 டன் வெங்காயம்: திருச்சி மார்க்கெட்டுக்கு வந்தடைந்தது

திருச்சி, அக். 30

எகிப்து நாட்டிலிருந்து 3 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது. திருச்சி வெங்காய மண்டி மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

நாளொன்றுக்கு 300 டன் அளவுக்கு வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் வரத்து பாதியாக குறைந்து, 150 டன் மட்டுமே வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியது. மொத்த விற்பனை விலையில் கிலோ ரூ.70-க்கும் சில்லறை விற்பனை விலையில் ரூ.80 முதல் ரூ.100-க்கும் தரத்துக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து 3 டன் வெங்காயம் திருச்சி வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது. ஆனால் எகிப்து வெங்காயத்தில் காரம் குறைவாக இருப்பதால் பொதுமக்களிடம் வரவேற்பை பெறவில்லை. கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்கிருந்து வழக்கமாக வரும் வெங்காயத்தின் அளவும் குறைந்துவிட்டது விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுகுறித்து திருச்சி வெங்காய மண்டி மார்க்கெட் மொத்த வியாபாரி தங்கராஜ் கூறியதாவது: திருச்சி வெங்காய மண்டி மார்க்கெட்டின் மொத்த தேவையில் பெரும்பாலான அளவு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் விவசாய பணிக்கு தொழிலாளர்கள் கிடைக்காத காரணத்தால் தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் வெங்காயத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் வெங்காயத்துக்கு வெளி மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருச்சி மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு 75 சதவீதம் வரை வரத்து குறைந்துவிட்டது. சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்த காரணத்தால் பெரிய வெங்காயத்தை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் பெரிய வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசு முறைப்படுத்தி விவசாய பணிகளுக்கு அனுப்பும்போது தமிழகத்திலேயே உணவு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும். அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *