வர்த்தகம்

தமிழ்நாட்டில் தொழில் துவங்க தென்னிந்திய வர்த்தக சபை நடத்தும் ‘யாதும் ஊரே’ 3 நாள் மாநாடு

முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க வணிக பயணம் எதிரொலி

தமிழ்நாட்டில் தொழில் துவங்க தென்னிந்திய வர்த்தக சபை நடத்தும் ‘யாதும் ஊரே’ 3 நாள் மாநாடு

சென்னை, அக். 15

தென்னிந்திய வர்த்தக சபை இந்தியாவிலேயே முதன் முறையாக ‘‘யாதும் ஊரே மாநாட்டை’’ ஆன்லைனில் அக்டோபர் 29 ந் தேதி முதல் 3 நாள் நடத்துகிறது. 38 நாடுகளில் உள்ள 300 தமிழ் சங்கங்களின் 10 ஆயிரம் தொழில் வல்லுனர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்று அங்குள்ள அமெரிக்க தமிழ் தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க அழைத்ததைத் தொடர்ந்து இந்த முதலீட்டு மாநாடு நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் வாழும் தமிழ் தொழில் அதிபர்களை ஒருங்கிணைக்கும் மாநாடு இது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு கலை, கலாச்சாரம், வணிகம், தொழில் நுட்பம் சார்ந்த ஒருங்கிணைப்பை தென்னிந்திய வர்த்தக சபை ஏற்படுத்தும் என்றார் இதன் தலைவர் ஆர்.எம்.அருண்.

தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புடன் ஆன்லைனில் உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் தென்னிந்திய வர்த்தக சபை ஒரு வழிகாட்டும் அமைப்பாக விளங்குகிறது. வெளி நாட்டு தமிழ் தொழில் வல்லுனர்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க வழிகாட்டுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளரும் என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ‘யாதும் ஊரே உலக முதலீடு திட்டம்’, அவரது அமெரிக்க, துபாய் வர்த்தக பயணம் ஆகியவவை தமிழகத்தில் தொழில் துவங்க ஊக்கம் அளிக்கிறது என்று தொழில் வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குனர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார்.

இந்த மாநாடு உலக தமிழ் சங்கங்கள் வலு பெறவும், கலாச்சார தொழில் நுட்பம் வளர்க்கவும் உறுதுணையாக இருக்கும். கலாச்சார வளர்ச்சி, தொழில் துவங்க ஊக்கமும் அளிக்கப்படும் என்றார் அவர்.

இந்த மாநாட்டில் 3டி கண்காட்சி மூலம் நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு புதிய தொழில் திட்டம் துவங்கவும், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வழிகாட்டுதல்களையும் பெறுவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *