சென்னை, ஏப். 6-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிதாக அமைத்து வரும் 3 வழித்தடங்களில் இயக்குவதற்கான டிரைவர் இல்லாத முதல் ரெயில் வருகிற ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் 4-வது வழித்தடம் கிழக்கில் கலங்கரை விளக்கத்திலிருந்து மேற்கில் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.8 கிலோ மீட்டர் நீளத்தில் அமைகிறது. இதில் 16.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையிலும், 10.3 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையிலும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 18 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும், 12 ரெயில் நிலையங்கள் சுரங்கத்திற்குள்ளும் அமைக்கப்பட்டு வருகிறது.
4-வது வழித்தடத்தில் உள்ள ஒரு பகுதியான கோடம்பாக்கம் புறநகர் முதல் பூந்தமல்லி புறநகர் வரை உயர்த்தப்பட்ட பாதையை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வருகிற 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பாதை முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தப்பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு வரும் பணிமனையில் நிறுத்தி பராமரிக்கப்படும். இந்த பணிமனை கட்டுமானம் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் வருகிற 2025-ம் ஆண்டிலிருந்து வருகிற 2028-ம் ஆண்டுக்குள் படிப்படியாக பல்வேறு கட்டங்களாக ரெயில் பாதைகள் திறக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தப்பாதையில் இயக்குவதற்கு 138 மூன்று பெட்டிகள் கொண்ட ரெயில் பெட்டிகள் தேவைப்படுகிறது.
இதில், டிரைவர் இல்லாத ரெயில்களின் முதல் தோற்றத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. தொடர்ந்து சென்னைக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் 1 ரெயில் பெட்டியும், அதைத் தொடர்ந்து அடுத்த 2 மாதங்களில் 6 கூடுதல் ரெயில் பெட்டிகளும் வர இருக்கிறது. இவை கோடம்பாக்கம்- பூந்தமல்லி இடையே இயக்கப்பட உள்ளது.
இந்தநிலையில், முதல் ரெயில் வருவதற்கு முன்பு உயர்த்தப்பட்ட ரெயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக வருகிற ஜூலை மாதத்திற்குள் தண்டவாளங்கள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இருக்கை மற்றும் நிற்பதற்கான வசதிகள், பெட்டிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள், மின்னணு சாதனங்களுக்கான சார்ஜிங் வசதிகள், பெண் பயணிகளுக்கு சரியான உயரத்தில் வெவ்வேறு வண்ணங்களில் கைப்பிடிகள் போன்ற தனித்துவமான அம்சங்களும் இடம் பெற உள்ளன.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கான காத்திருப்பு பொத்தான்கள், ரெயில் செல்லும் பாதைக்கான வரைபடங்கள் மற்றும் பொழுதுபோக்குக்காக எல்.சி.டி. திரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த டிரைவர்கள் இல்லாத 3 பெட்டிகளை கொண்ட ரெயில்கள் ஒவ்வொன்றிலும் சுமார் ஆயிரம் பயணிகள் செல்ல முடியும். 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். தடைகளை கண்டறியும் சென்சார்கள், தண்டவாளத்தை தடுக்கும் பொறிமுறைகள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதற்கான பிரேக்கிங் சிஸ்டம்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.