சென்னை, அக்.11-
15 வயது சிறுமியின் முகத்தில் ரத்தநாள குறைபாடு நோயால் உருவான கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம், பத்மபூரைச் சேர்ந்தவர் நாராயணா. தேநீர் கடை ஊழியர். மகள் தசபந்தி. 8ம் வகுப்பு மாணவி. இவளுக்கு ரத்தநாள குறைபாடு நோய் காரணமாக மூக்கு அருகிலும், மேல்தாடையிலும் உதட்டுக்கு கீழேயும் கட்டி உருவானது. இது பார்ப்பதற்கு மிக கோரமாக இரந்தது. ரத்தக் கசிவாலும் தசபந்தி நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார்
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் அக்கட்டியை நீக்க முடியவில்லை. இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெற்றோருடன் சிறுமி வந்தாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் முகத்தில் இருந்த கட்டியானது கண், தாடை, மூளை போன்ற அனைத்து நரம்புகளையும் ஒன்றாக இணைத்து இருந்ததை கண்டறிந்தனர்.
பின்னர் அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டீன் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் மேற்பார்வையில் ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் க.இளஞ்சேரலாதன் மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த மருத்துவக்குழு கடந்த 5-ந் தேதி சிறுமியின் கால் நரம்புகள் வழியாக ரத்தத்தை உறைய வைக்கும் வேதியியல் பொருளை, கட்டி இருந்த இடத்திற்கு கொண்டு சென்று கட்டியின் நடுப்பகுதியில் அதனை செலுத்தி அப்பகுதியில் இருந்த ரத்த ஓட்டத்தை முழுவதுமாக உறையச் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அறுவைசிகிச்சை செய்து முகம் மற்றும் தாடை பகுதிகளில் இருந்த கட்டிகளை அகற்றினர்.
லட்சத்தில் ஒருவருக்கு…
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் எஸ்.பொன்னம்பலநமச்சிவாயம் கூறியதாவது:-
தசபந்தியை பரிசோதித்தபோது, அவருக்கு பிறவியிலேயே ரத்த நாளங்கள் சரியாகப் பிரிந்து செல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து கட்டியாக மாறியிருப்பது தெரியவந்தது. இதுபோன்ற ரத்தக்குழாய் கட்டிகள் லட்சத்தில் ஒருவருக்கு தான் வரும்.
ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் இளஞ்சேரலாதன், மருத்துவர்கள் பெரியகருப்பன், சண்முக வேலாயுதம், தீபன்குமார், சித்ராதேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர்.
ரத்தத்தை உறைய வைக்க செலுத்தப்பட்ட வேதியியல் பொருள் மற்ற நரம்புகளில் பட்டால் பார்வையிழப்பு, மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரூ.8 லட்சம் செலவு
மேலும் அந்த கட்டிக்கு செல்லும் ரத்த குழாய்களை உறைய வைக்காமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அறுவை சிகிச்சை ஆரம்பித்த 5 நொடிகளில் அனைத்து ரத்தமும் உடலில் இருந்து வெளியேறி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நவீன சிகிச்சை மூலமாக கட்டி அகற்றப்பட்டு உள்ளது.
இது போன்ற அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். இன்னும் ஒரிரு நாளில் தசபந்தி வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிகிச்சை தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள், ‘எங்களுடைய மகளுக்கு முகத்தில் இருந்த கட்டியை எடுக்க ஒடிசா, ஐதராபாத், ஆந்திரா போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் தான் ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள் எங்கள் மகளின் முகத்தில் உள்ள கட்டியை நீக்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று மகிழ்ச்சியோடு கூறினர்கள்.