செய்திகள்

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை: எதிர்வீட்டு பெண் கைது

Makkal Kural Official

ராதாபுரம், செப். 10–

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை செய்த எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள் (49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக சிறிய, சிறிய தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் சஞ்சய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். பின்னர் பெற்றோர் தங்களது குழந்தையை அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதற்காக தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து விக்னேஷ் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள். அப்போது, தங்கம்மாள் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அதை அறிந்த அவர் தனது வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடினார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சாக்கு மூட்டையில்…

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர்.அதில் சாக்கு மூட்டையில் கட்டி இருந்த சஞ்சயை பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தங்கம்மாள் மகனின் துக்க நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குடும்பத்தினர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது மகன் இறந்ததற்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்ததே காரணம் என்றும், இதனால் அவரது குடும்பத்தினரை பழிவாங்க தங்கம்மாள் காத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மூச்சுத்திணறி குழந்தை பலி

நேற்று காலையில் தங்கம்மாள் வீட்டின் முன் சஞ்சய் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனை வீட்டிற்கு அழைத்து சென்ற தங்கம்மாள் ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கட்டினார். பின்னர் வாஷிங் மெஷினில் போட்டு மூடியைக் கொண்டு மூடினார். இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தங்கம்மாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ராதாபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட தங்கம்மாள், ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *