‘‘இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்’’
‘‘பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; எந்தவிதத்
தயக்கம், சுணக்கம் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’
நியூயார்க், ஜூன் 23–
‘3–வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’ என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அசைக்க முடியாத நம்பிக்கையோடு வெளியிட்டார்.
“இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்” என்று உறுதிபடக்கூறிய மோடி, பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; இதை எந்தவித தயக்கமும், சுணக்கமும் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். –
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 2-–வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் காத்திருந்து பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜோ பைடன், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
அப்போது ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து மோடி அமெரிக்க பாராளுமன்றத்துக்கு சென்றார். அவரை எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அதை மோடி புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.
பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
140 கோடி இந்தியர்கள் சார்பில்…
‘‘140 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்து உள்ளது மிகப்பெரிய கவுரவம் ஆகும். அதுவும் இந்த அவையில் 2-வது முறையாக உரையாற்றுவது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்தியா –- அமெரிக்கா இடையேயான உறவு ஜனநாயக நெறிகளால் கட்டமைக்கப்பட்டது. இரு நாட்டு அரசியல் சாசனமும் ‘மக்களாகிய நாம்’ (We The People) என்ற வார்த்தைகளோடுத்தான் தொடங்குகின்றன. இரு நாடுகளும் அதன் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பயணிப்பது உலக நன்மைக்கும், சர்வதேச அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வித்திடும்.
ஏஐ – ஏஐ- விளக்கம்
கடந்த 7 ஆண்டுகளில் உலகில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் தனது உறவை ஆழப்படுத்துவதில் உறுதியுடன் முன்னேறியுள்ளன. இந்த ஏஐ (செயற்கை நுண்ணறிவு) காலத்தில் இன்னொரு ஏஐ- (அமெரிக்க –- இந்திய உறவு) நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது.
ஒரு துடிப்பான ஜனநாயகத்தின் பிரதிநிதியான நான் ஒரு விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். சபாநாயகர் பணி நிச்சயமாக கடினமானதுதான். பல்வேறு கருத்து மோதல்களையும், சித்தாந்த வேறுபாடுகள் மீதான விவாதங்களையும் எதிர்கொள்வதன் சிக்கல் எனக்குத் தெரியும். உங்களுக்கு எப்போதெல்லாம் ஆலோசனை வேண்டுமோ அப்போதெல்லாம் நான் உதவத் தயாராக இருக்கிறேன்.
விரைவில் 3–வது வல்லரசு
நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால் இப்போது 5-வது பொருளாதார வல்லரசாக உள்ளது. நிச்சயமாக விரைவில் உலகில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். இந்தியா வளரும்போது இந்த ஒட்டுமொத்த உலகமும் வளரும்.
ஜனநாயகத்தின் ஆன்மா
ஜனநாயகத்தின் ஆன்மா, அனைவரையும் உள்ளடக்கும் கொள்கை, நீடித்ததன்மை ஆகியன நம்மை (இந்தியா மற்றும் அமெரிக்கா) அடையாளப்படுத்துகிறது. இவைதான் உலகம் மீதான நம் பார்வையையும் தீர்மானிக்கிறது. இந்தியா இந்த பூமியின் மீதான அக்கறையுடன் வளர்கிறது. இந்தியக் கலாச்சாரம் சுற்றுச்சூழலை ஆழமாக மதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை பூமியின் வளம் சார்ந்தது. இந்தியாவின் இலக்கு பூமியின் வளத்தை உறுதி செய்தல்.
ராஜதந்திரத்துக்கான காலம்
உக்ரைன் மோதலால் ஐரோப்பாவுக்குள் போர் திரும்பியுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இதில் பெரும் வல்லரசுகள் ஈடுபட்டுள்ளதால் விளைவுகளும் கடுமையாக உள்ளன. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் போருக்கான காலம் இது இல்லை. இது பேச்சுவார்த்தைக்கும், ராஜதந்திரத்துக்குமான காலம்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், மும்பை தாக்குதல் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் இன்னமும் அப்படியே அதே அபாயத்தை அச்சுறுத்தலை உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி. அதை எவ்வித தயக்குமும் சுணக்கமும் காட்டாமல் ஒடுக்க வேண்டும்.
பெருந்தொற்று காலத்திலிருந்து விடுபட்டுவரும் நாம் இந்த உலகுக்கு புதிய ஒழுங்கைத் தர வேண்டும். அதனால் தான் ஜி20 குழுவில் ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று நான் நம்புகிறேன். பலதரப்பு முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உலகம் மாறும்போது நாமும் மாற வேண்டும்.
அமைதி, ஸ்திரத்தன்மையை
உறுதிப்படுத்துவதே…
வற்புறுத்தல், மோதல் ஆகியவை இந்திய – பசிபிக் பிராந்தியத்தியத்தை கருமேகம் போல் சூழ்ந்துள்ளன. இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தப்படுவதுதான் இந்தியா – அமெரிக்கா உறவின் மைய நோக்கம். நான் 2016-ல் இங்கே உரையாற்றும்போது, இந்தியா – அமெரிக்கா நட்புறவு எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்ல முதன்மையானது என்று சொல்லியிருக்கிறேன். அந்த எதிர்காலம் இதுதான்.
இந்திய – -அமெரிக்க மரபணு மற்றும் ரத்தத்தில் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது. இந்த ஜனநாயகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தியா- – அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கும் முதன்மையானது ஜனநாயகம். இதன் அடிப்படையில் தான் அரசியலமைப்பு உள்ளது.
இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இட மில்லை. சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா – -அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும்.
அதிக பெண் விஞ்ஞானிகள்
இந்தியாவில் தான்…
உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர். பெண்களின் கல்வி அறிவு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.
இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. இந்திய – -பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட இரு நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகிறது. மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம் தான்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். பயங்கரவாதத்தை ஒழிக்க 2 நாடுகளும் தோளோடு தோள் சேர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறது. இன்று இந்தியாவும், அமெரிக்காவும் விண்வெளியிலும், கடலிலும், அறிவியல், கலை மற்றும் ஸ்டாட்அப், வர்த்தகம், விவசாயம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மனித துன்பங்களை தடுக்க நாம் அனைவரும் முடிந்ததை செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாராளுமன்றத்தில் மோடியின் பேச்சை எம்.பி.க்கள் ஆர்வத்துடனும், கரவொலி எழுப்பியும் உற்சாகத்துடன் கேட்டனர்.
கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கேப்பிட்டால் ஹில்லுக்கு வருகை தந்த பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவைத்தலைவர் கெவின் மெக்கார்த்தி மற்றும் இதர உறுப்பினர்களுடன் பிரதமர் தனித்தனியே கலந்துரையாடினார்.