செய்திகள்

3 ரோடு ஷோ: தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாட்கள் தீவிர பிரச்சாரம்

Makkal Kural Official

3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்

சென்னை, ஏப். 3–

தமிழகத்தில் பிரதமர் மோடி 9–ந்தேதி முதல் 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். 3 ரோடு ஷோ மற்றும் 3 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

தி.மு.க. கூட்டணி, அண்ணா தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் இதுவரை கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவையில் நடந்த பிரம்மாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்றார். மேலும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி, 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

9–ந் தேதி

வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். அப்போது தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன், கள்ளக்குறிச்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ், திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி தொகுதி பா.ம.க. வேட்பாளர் கணேஷ் குமார், சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி, கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் ஆகியோருக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

சென்னை தி.நகரில்…

அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகரில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். அப்போது மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பா.ம.க வேட்பாளர் கே.பாலு ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்கிறார்.

10–ந் தேதி

பின்னர் மறுநாள் 10ந்தேதி காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய அமைச்சருமான முருகனுக்கு ஆதரவாக அங்கு ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று மதியம் கோவையில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

13, 14–ந் தேதி

அதன் பிறகு பிரதமர் மோடி மீண்டும் 13ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

14–-ந் தேதி அன்று விருதுநகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏற்கனவே 5 முறை வந்துள்ள நிலையில் 6வது முறையாக 9–ந்தேதி வருகை தந்து, மேலும் 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *