செய்திகள்

3–ம் முறையாக அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம்

3–ம் முறையாக அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

ஓயாது உழைப்போம்; புதிய வரலாறு படைப்போம்

சென்னை, பிப்.28

ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்து நல்லாட்சி நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம் என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

3 ம் முறையாக அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (27 ந் தேதி) கலைவாணர் அரங்கில், தமிழக சட்டமன்றப் பேரவையில் 2021 -2022 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது: –

அம்மா அரசு உள்ளார்ந்த முனைப்புடன் செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களாலும், அறிவித்துள்ள சமூக மேம்பாட்டு திட்டங்களாலும், தமிழக மக்கள் பெருவாரியாக பயன்பெற்று அம்மா அரசுக்கும், இவ்வரசை அமைத்துள்ள அண்ணா தி.மு.க.விற்கும் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் 4.79 லட்சம் கோடி ரூபாய் எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62,000 ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிர்க்கட்சித் தலைவரான, மு.க. ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் தனது வாதத்தை இப்பேரவைக்கு வந்து நேருக்கு நேராக என் முன் வைத்து, நான் தருகின்ற பதிலை அவர் கேட்க முடியும். ஆனால், திமுக.-வின் வழக்கப்படி, அவர் வெளிநடப்பு அவை புறக்கணிப்பு செய்துவிட்டார் என்பதுதான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராகி, இப்பேரவைக்கு அனுப்புவதே தொகுதிப் பிரச்சினையை இந்த மாமன்றத்தில் பேசுவதற்காகத்தான்.

சுற்றுலா வருவது போல…

ஆனால், இந்த ஜனநாயகக் கடமையை திமுக-வினர் என்றுமே மதிப்பதில்லை. ஏதோ சுற்றுலாவிற்கு வருவதுபோல இந்த மாமன்றத்திற்கு வருகிறார்கள். இங்கே உட்கார்ந்து பலவாறு சிரிக்கிறார்கள், பேசுகிறார்கள். வந்ததும் வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார்கள். மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகுதான் பேரவைக்கு வருவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.

அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை அந்த அத்தை உருமாறி சித்தப்பா ஆகப்போவதும் இல்லை. மு.க. ஸ்டாலின் முதல்வராகப் போவதுமில்லை. திமுக.வினர் என்றைக்குமே சட்டமன்றத்திற்கு வரவே போவதில்லை. தேர்தலில் படுதோல்வியை திமுக. சந்திக்கப் போகிறது.

இந்த ஆண்டு சர்வதேச அளவில், பல நாடுகள் கடன் வாங்கித்தான் செலவினங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டில், பல நாடுகள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்திற்கு மேல் கடன் வாங்கியுள்ளன. நமது மாநிலத்தில் 1.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை மட்டுமே கூடுதல் கடன் பெற்றுள்ளோம். ஆகவே, மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதியை ஏற்படுத்தும்வண்ணம், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான பிரச்சாரம் செய்ய கூடாது என இந்த அவையின் வாயிலாக எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ராணுவ ரகசியமா?

ஊர் ஊராகப் போய், நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகள் கொடுத்து, தி.மு.க.-வினரை விட்டு மக்களிடம் மனு எழுதச் செய்து, அதை வாங்கி ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டுகிறாராம் ஸ்டாலின். பூட்டியதோடு மட்டுமல்லாமல், அதற்கு அரக்கு வைத்து, சீலும் வைக்கப்படுகிறது. ஏனென்றால் இது பெரிய ராணுவ ரகசியம் பாருங்கள். ஆனால், நாம் இன்றைக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனுவை வாங்குகிறோம். மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உட்கார்ந்து மனுவை வாங்குகிறார். அதற்குரிய தீர்வை ஒரு வாரத்திற்குள் முடிக்கிறார்கள்.

செவ்வாய்கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். புதன் கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். வியாழக்கிழமையும் மனு வாங்குகிறார்கள். அதற்குரிய தீர்வையும் முடிக்கிறார்கள். வெள்ளிக்கிழமையும் மனு வாங்கப்படுகிறது. ஆக, ஒவ்வொரு வாரத்திலும் வேலை நாட்களில் அரசின் சார்பாக மனு வாங்கப்படுகிறது. உடனடியாக தீர்வும் காணப்படுகிறது. இதுதான் ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணி.

அதை நாம் நிறைவாக செய்து கொண்டிருக்கின்றோம். இவர் ஊர் ஊராகப் போவாராம். மனு வாங்குவாராம், வாங்கி ஒரு பெட்டியில் போட்டு பூட்டுவாராம். திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டுவாராம். அதை துணியை வைத்து கட்டி, அரக்கு சீலும் வைப்பாராம். 100 நாட்கள் கழித்து அதை திறந்து பார்ப்பாராம். என்ன விந்தையான வேடிக்கை.

மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்ற வேண்டுமென்று ஊர் ஊராகச் சுற்றி பொய் பிரச்சாரம் செய்கின்ற நிலை தான் இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் நிலை. அது அவருடைய நிலை. அவர்கள் மனு வாங்கியவுடன் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அம்மா அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உடனடியாக அனுப்பி, அதற்குரிய பதில் வரவில்லை என்று சொன்னால், நீங்கள் உள்ளபடியே ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறீர்கள் என்று பொருள். இப்படியெல்லாம் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது.

மக்கள் நம்பிக்கை இழந்தீர்கள்

ஏனென்றால், நீங்கள் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. என்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை, என்றைக்குமே உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்துவிடுவாராம் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது” என்று நாங்கள் சொல்லவில்லை, மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு துரோகம் செய்தார்கள். எவ்வளவோ துரோகம். ஆற்ற வேண்டிய கடமைகளை, தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தர வேண்டிய கடமைகளை தமிழகத்திற்கு நாம் காலம் காலமாக, பாரம்பரியமாக பெற்று வந்த உரிமைகள் பறி போகின்ற சூழல் ஏற்படுகின்றபோது அதைக் காப்பாற்றுகின்ற அரசாக அந்த அரசு செயல்படவில்லை.

குறிப்பாக, காவேரி பிரச்சினையை எடுத்துக் கொண்டால், அதிலும் அவர்கள் செய்யவில்லை. அம்மா தான் காவேரி பிரச்சினையை, நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்புக்கு ஏழு ஆண்டுகளுக்கு பின்னாலே – அவர்கள் நினைத்திருந்தால் காங்கிரஸ் -தி.மு.க. ஆட்சியில் 24 மணி நேரத்தில் அரசாணை பெற்றுத் தர முடியும். அப்போதுதான் அந்த நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்புக்கு வலு இருக்கும். அதைச் செய்யவில்லை.

சோடை போனோமா?

அம்மா ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு 2011 ம் ஆண்டுக்கு பின்னாலே உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி, சட்டப் போராட்டம் நடத்தித்தான் காவேரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத் தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர். அதற்காக தஞ்சை தரணியில் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மிகப் பெரிய நன்றியறிவிப்புக் கூட்டத்தை நடத்தினார். அதில், அம்மா பேசும்போது சொன்னார்.

33 ஆண்டு கால என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியடைந்த ஒருநாள் இருக்கும் என்று சொன்னால், காவேரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத் தந்த அந்த நன்னாள்தான் என்று அம்மா எழுச்சியோடு சொன்னார். மீண்டும் அந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதற்கு காவேரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் சென்று, அம்மா வழக்கு தொடுத்தார். இன்றைக்கு, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அம்மா அரசு, அதை தலைமைதாங்கி நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் அந்த வழக்கை துரிதப்படுத்தி, காவேரி நதிநீர் ஆணையத்திற்கும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் அரசாணை பெற்றுத் தந்திருக்கின்ற அரசாங்கமாக இந்த அரசு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. எதில் நாங்கள் சோடை போனோம்.

பார்த்து பார்த்து கொண்டு வந்தோம்

முல்லைப் பெரியாறுக்கு அரசாணை பெற்றுத் தந்ததும் அம்மா தான். தஞ்சை தரணி பாலைவனமாகக் கூடாது என்று கார்பன், ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவந்தபோது அதை முற்றிலும் தடுத்து நிறுத்தி, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக யார் அறிவித்தது? முதலமைச்சர் தானே அறிவித்தார்.

இது யார் ஆட்சியில் நடந்தது? உங்கள் ஆட்சியில் நடந்ததா? எங்களுடைய ஆட்சியில்தான் நடந்தது? ஆக, நல்லபல திட்டங்களைக் கொண்டுவந்த அரசாக இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொறுக்கவில்லை அவர்களுக்கு. ஒவ்வொரு திட்டங்களும், ஒவ்வொரு செயல்பாடுகளும் இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்றது. மக்களுடைய எண்ணங்களை, மக்களுடைய குறைகளை எப்படி இந்தத் திட்டத்தின் மூலமாக, சட்டத்தின் மூலமாகக் கொண்டுவர முடியும் என்று பார்த்து, பார்த்து ஒவ்வொன்றையும் நாம் கொண்டு வந்திருக்கிறோம்.

நீட் தேர்வு. அதில் மிகப்பெரிய பின்னடைவு நம்முடைய தமிழகத்திலே படிக்கின்ற மாணவர்களுக்கு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் அதில் முன்னே வர முடியவில்லை. இதைப் பார்த்து, ஆராய்ந்து, சென்ற வருடத்தில், உதாரணத்திற்கு அரசு கல்லூரியில் படித்த மாணவர்கள் 6 பேருக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

நல்லரசு

இதை முதலமைச்சர் புரிந்துகொண்டு, அதன்பிறகு அனைவரையும் கலந்துபேசி, 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, இந்த ஆண்டு மட்டும் 435 பேருக்கு இன்றைக்கு மருத்துவக் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதுதானே ஜனநாயக சோஷியலிசம், சமத்துவம். இது யாரால் உருவாக்கப்பட்டது? அம்மா ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மா வகுத்து தந்த பாதை. ‘மயிலே மயிலே’ என்று இறகு போடவில்லை என்றால், அது இறகு போட வேண்டிய வேலையையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இதுதான் ஒரு நல்லரசு.

ஏமாற்ற முடியாது

நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய பணி, கடமை. அதை நாங்கள் செய்து கொண்டிருகின்றோமே. நீங்கள் ஊர் ஊராகப் போய், பல வேஷங்களை எல்லாம் போட்டு, மக்களை ஏமாற்ற முடியாது. ஆக, இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அம்மா அரசு, குறைகள் இல்லாத ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவேதான் குறைகளே இல்லாத நிதிநிலை அறிக்கையை நாங்கள் கொடுத்திருக்கின்றோம் என்று மக்கள் நம்மை பார்த்து, பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

10 சதவிகித வளர்ச்சி

தேசத்தை ஒப்பிடும் பொழுது நமது மாநிலத்தில் சுமார் 10 சதவீதம் அதிகமாக வளர்ச்சி காணப்படுகின்ற நிலை கொரோனா பெருந்தொற்று இருந்தபோதிலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நமது மாநிலம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதையும்,

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வரவேண்டும்” என்று நினைத்தவர் புரட்சித்தலைவி அம்மா, அப்படி நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டியவரும் அம்மா தான். அம்மா இட்ட ஆணைப்படி நடந்து, நாம் சாதனைகள் செய்திருக்கின்றோம். அவர் காட்டிய வழி நடந்து மக்களுக்கு சேவைகள் செய்திருக்கிறோம். அம்மாவின் கட்டளைக்கு அடிபணிந்து சீரியசெயல்கள் செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம்.

அசைக்க முடியாத சக்தி

எதிரிகளால் இம்மியும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக நாம் உருவெடுத்திருக்கிறோம். எல்லாத் துறைகளிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம். தமிழ்நாடு பெற்றுள்ள தேசிய அளவிலான பல்வேறு விருதுகள் இதனை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. அம்மா ஆட்சியில் தமிழகம் வீர நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் சக்தி அந்த வீர நடையை, இன்று எங்கள் இயக்கத்தின் வெற்றிநடையாக மாற்றியிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் மனம் மகிழும்படி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தாராளமாக நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

புரட்சித்தலைவி அம்மா நம்மை எல்லாம் நம்பி இப்பேரவையில் உரைத்த கடைசி சூளுரை “எனக்கு பின்னாலும் தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் ஆளும்’’ என்பதைத் தான்! காலமகள் தந்த கோலத் திருமகளின் அந்த கடைசி சபதத்தை கணீர்குரல் சத்தியத்தை, தேசியகீதமாக நாம் தினம்பாடி உழைப்போம்!

ஓயாது உழைப்போம்

மூன்றாம் முறையாகவும் இந்த முத்தமிழ் இயக்கத்தின் ஆட்சியை அமைத்திட, ஓயாது உழைப்போம்! களம் புகும் போர்க்களத்தில் கம்பீரமாய் ஜெயிப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து புது வரலாறு படைப்போம். அதற்காக ஊன் உறக்கம் தவிர்ப்போம், ஒன்றரைக் கோடி சிப்பாய்படையோடு வாகை சரித்திரம் வடிப்போம் என்று கூறி, மீண்டும் மே திருநாளில் இப்பேரவையில் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி எனது பதிலுரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *