செய்திகள்

3 மாநிலங்களில் தொடர் கொள்ளை: உ.பி. கொள்ளையர்கள் 4 பேர் கைது

ரூ.2 1/2 கோடி தங்கம், 14 கிலோ கஞ்சா, துப்பாக்கி பறிமுதல்

ஐதராபாத், செப். 14–

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை இன்று கைது செய்துள்ள ஆந்திரா காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 1/2 கிலோ தங்கம், துப்பாக்கி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒரு கும்பல் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பான புகார்கள் 3 மாநில காவல்துறையிலும் பதிவாகியிருந்தது. அண்மையில், ஆந்திரா மாநிலம், வாரங்கால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தக் கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இந்தத் தொடர் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

ரூ.2 1/2 கோடி தங்கம் பறிமுதல்

இந்நிலையில் இன்று, இந்தத் தொடர் கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டு வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை ஆந்திர மாநிலம், வாரங்கால் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், அந்தக் கும்பலிடம் இருந்து 14 கிலோ கஞ்சா, கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து வாரங்கால் காவல் ஆணையர் ரங்கநாத் கூறுகையில், “வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்பர் குரேஷி (வயது 34), கபில் ஜாதாவோ (வயது 30), முகமது ஷெரீப் (வயது 56) மற்றும் முகமது ஜாத் (வயது 25) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். இந்தக் கும்பல் மீது 32 வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2.38 கிலோ தங்கம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான 14 கஞ்சா பொட்டலங்கள், 4 போன்கள், 4 போலி ஆதார் கார்டுகள், பிரான்சில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்று, துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம்.

மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிக்கும் இந்தக் கும்பல், வாரங்கால், அடிலாபாத், பெங்களூரு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *