செய்திகள்

3 மாத பெண் குழந்தை விற்பனை: 5 பேர் கைது

அரியலூர், செப். 22–

அரியலூரில் மூன்றுமாத பெண் குழந்தையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாய், தந்தை உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் சரவணன் (வயது 38). இவரது மனைவி மீனா. சரவணன் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சரவணன், மீனா தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் நான்காவதாக சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நான்காவது பெண் குழந்தையை பெற்றோர்கள் விற்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

தாய், தந்தை உள்பட 5 பேர் கைது

தொடர்ந்து, 3 மாத பெண் குழந்தையை அவரது தந்தை விற்றுவிட்டதாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், 3 மாதக் குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மனச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம் கோவையில் உள்ள குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்களது நான்காவது குழந்தையை விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கோவையில் விற்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தையை மீட்ட போலீசார், தாய் தந்தை உட்பட 5 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *