சென்னை, பிப்.15-–
‘‘இன்னும் 3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு சென்னை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தமு இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தவர், மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-–
‘‘மிக, மிக முக்கியமான நாள். காதலர் தினம். இதைச் சொன்னால் சிலபேருக்கு கோபம் வரும். அவர்கள் எல்லாம் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாதுன்னு சொல்வார்கள். காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். அப்படிப்பட்ட முக்கியமான தினத்திலே இந்த திருமணங்களை நடத்தி வைக்கின்றோம்.
முந்தைய ஆட்சியினர் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணங்களை நடத்தி வைக்கும் திட்டத்தையே நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால், தி.மு.க. அரசு, தற்போது வரை கிட்டத்தட்ட 1,800 திருமணங்களை நடத்தி வைத்திருக்கின்றார். இந்த ஆண்டு இன்னும் 700 திருமணங்கள் நடத்தி வைக்க அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொருவரும்
அரசு தூதுவர்கள்…
ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 3 மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் நம்முடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த அரசினுடைய சாதனைகளை, அரசின் திட்டங்களை நீங்கள்தான் மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். முதல்-அமைச்சர்தான் எங்களுடைய பிராண்ட் அம்பாசிட்டர், இங்கே வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் அரசு தூதுவர்களாக திகழ வேண்டும்.
எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் நடத்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கை இனிமையான வாழ்க்கையாக, சுகமான வாழ்க்கையாக அமையும். மணமக்களுக்கு ஒரே, ஒரு வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப்பெயரை சூட்டுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, துணைமேயர் மகேஷ்குமார், அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.