குவாட், ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்பு
புதுடெல்லி, செப்.18-–
3 நாள் பயணமாக பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின்போது அவர் குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடக்கிறது.அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுவதால் நடப்பு ஆண்டின் மாநாட்டை அவர் தலைமை தாங்கி நடத்த விருப்பம் தெரிவித்தார். அதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்தது.
அதன்படி 2024-ம் ஆண்டுக்கான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் மாகாணத்தில் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்களும் பங்கேற்பு
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதையொட்டி அவர் 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். குவாட் மாநாட்டில் மோடி மற்றும் ஜோ பைடனுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் தலைவர்கள், கடந்த ஒரு ஆண்டில் குவாட் அடைந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதுடன், அடுத்த ஆண்டுக்கான பணிகளுக்கு திட்டமிடுவார்கள் என்றும் உறுப்பு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி 22-ந் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னர் 23-ந் தேதி ஐ.நா. பொதுசபையில் ‘எதிர்கால உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மேலும் மாநாட்டின் இடையே உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.