சென்னை, செப்.20–
தங்கம் விலை இன்று அதிடியாக ரூ.480 உயர்ந்து, மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024–25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும் போது சொற்பமாக சரிவதும் என இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.