சென்னை, அக். 15–
கன மழையால் பயணியர் பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் 3 நாட்களுக்கு வழக்கமானதைவிட கூடுதல் ரெயில்கள் இயக்குவதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், கூடுதல் மெட்ரோ ரெயில்களை இயக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று(15–ந்தேதி) முதல் 17ந்தேதி வரை 3 நாட்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெயில் சேவை குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:–
அனைத்து முனையங்களில் இருந்தும் காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 42 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் 47 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
* வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
* சென்னை சென்ட்ரல் – செயின்ட் தாமஸ் வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்
* விம்கோ நகர் – விமானநிலையம் வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
பயணிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.