செய்திகள்

3 கிலோ நகைகளை அணியும் வேட்பாளரை பார்க்க கூட்டம்

ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள நகைகளை அணிந்து வரும் சுயேட்சை வேட்பாளரை பார்க்க பெண்கள் கூடுகின்றனர்.

தென்காசி, மார்ச் 29–

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர புதுப்புது உத்திகளில் ஈடுபடுகின்றனர். அதுபோன்று, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில், பனங்காட்டு படை கட்சி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், மூன்று கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு, கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவுடன் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்

ஆனால் அவர்களுடைய ஹெலிக்காப்டர் தரை இறங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில், அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ போட்டியிடுகின்றனர்.

3 கிலோ நகைகள்

சுயேச்சையாகப் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதாம். காரணம் அவர் உடலில் அணிந்திருக்கும் நகைகள்தான். பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, கைகள், கழுத்து நிறைய நகைகளை அள்ளி அணிந்து கொண்டு அவர் சொல்கிறார். ஹரி நாடாரின், கழுத்திலும், கையிலும் மட்டும் சுமார் 3 கிலோ தங்க நகைகள் உள்ளன. மொத்தம் 11கிலோ தங்க நகைகள் இவரிடம் உள்ளதாம்.

அதாவது அவர் கையிலும் கழுத்திலும் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு, சுமார் ஒன்றே கால் கோடி என கூறப்படுகிறது. பொதுவாகவே நகைகள் மீது பெண்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். எனவேதான் நகைகள் அணிந்து வரும் ஹரி நாடார் பிரச்சாரத்திற்குப் பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *