செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு

தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை

முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு

சென்னை, ஜன.8

தமிழகம் முழுவதும் 2 ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று காலை தொடங்கியது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒத்திகை முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.

போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் நாட்டிலிருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் தடுப்பு மருந்தை சேமிப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், தடுப்பு மருந்தை தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் முதல் கட்டமாக 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது. கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது நாடு முழுவதும் இன்று 736 மாவட்டங்களில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் ஒத்திகை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 மையங்களில் இன்று காலை தொடங்கியது. ஒவ்வொரு மையங்களிலும் ஒரு பொறுப்பு அதிகாரி மற்றும் 25 சுகாதாரப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதலில் ஆதார் அட்டை சரிபார்த்தல், பிறகு கணினியில் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தல் பிறகு அவர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பிறகு அவர்கள் மேற்பார்வை அறையில் தங்க வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் கழித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக அரசுக்கு பாராட்டு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் ஹர்ஷவர்தன் கூறுகையில்,

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா நோய்த்தொற்றை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2300 ஆய்வகங்கள் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

2 நாளில் தடுப்பூசி

மேலும், நாடு முழுவதும் இன்று 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

குறுகிய காலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. 2 நாள்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

இந்தியா குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் நாட்டிலிருந்து விரட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும், அதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பார்வையிட்டார்.

எடப்பாடியுடன் சந்திப்பு

இன்று மதியம் 1 மணி அளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *