டெல்லி, ஜூலை 1–
ஒடிசா ரயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்த நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, தற்போது அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 2ஆம் தேதி வழக்கம் போல இந்த ரெயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அதேபோல பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது.
பொது மேலாளர் நீக்கம்
உடனடியாக மீட்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களில் இன்னும் 52 உடல்கள் யாருடையது என்பதை அடையாளம் காண முடியவில்லை. இந்த உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, தற்போது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை அமைச்சரவையின் நியமனக் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் விபத்திற்கு காரணம், போதுமான அளவு நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படாததுதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ரயில்வே பணியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.