செய்திகள்

29–-ந் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை, ஜூலை 21–

அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 69 மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் சான்றிதழ் அவசியம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:

அண்ணா பல்லைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த 69 மாணவ- – மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்.

தங்கப்பதக்கம் பெறும் 69 பேரில் 31 மாணவ- – மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை சேர்ந்தவர்கள். 38 பேர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படித்தவர்கள். பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்க அனைத்து ஆராய்ச்சி மாணவர்களையும் ஜூன் 23-ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.