மேட்டூர், அக். 23–
தொடர் மழை காரணமாக 29 நாட்களுக்கு பின்னர் மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்டி இருக்கிறது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அக்.21ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 18,094 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
நேற்றைய தினம், சற்று குறைந்து 17,856 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து, 29,850 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100.01 அடியை எட்டி உள்ளது. நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. ஆக இருக்கிறது.
இதன் மூலம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, நீரின் அளவு வெகுவாக சரிந்ததால் அக்டோபர் 14ம் தேதி அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு சரிந்தது, குறிப்பிடத்தக்கது.