செய்திகள்

29 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்த மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்

கோலாலம்பூர், செப். 15–

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல், நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான டத்தோ எஸ் சாமிவேலு இன்று அதிகாலை காலமானார். தற்போது 86 வயதாகும் சாமிவேலு, வயது முதிர்வு காரணமாக, இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இயற்கை எய்தினார் என கூறப்படுகிறது. இந்த தகவலை,முன்னாள் சுகாதார அமைச்சரும் மஇக-வின் முன்னாள் தலைவருமான எஸ்.சுப்ரமணியம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமைச்சராக 29 ஆண்டுகள்

1936 ஆம் ஆண்டு மார்ச் 8, பிறந்த சாமிவேலு 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் மஇக-வின் தலைவராகப் பதவி வகித்திருந்தார். மேலும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் பல அமைச்சகங்களில் பொறுப்பு வகித்து ஆக அதிக காலம் அமைச்சராக இருந்தவர் டத்தோ சாமிவேலு. சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக 1974 முதல் 2008 வரை பொறுப்பு வகித்தார். அவர் அரசியலிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மறைந்த டத்தோ சாமிவேலுவின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என்று, அவரது குடும்பத்தின் சார்பாக, முன்னாள் பத்திரிக்கை செயலாளர் டத்தோ ஈ.சிவபாலன் ஊடக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், இன்று காலை காலமான டத்தோ டாக்டர் சாமிவேலுவின் இறுதிச் சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன.அஞ்சலி செலுத்த விரும்புவோர் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கோலாலம்பூர் முகவரியில் உள்ள சாமிவேலுவின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். இறுதி ஊர்வலம் நாளை (செப்டம்பர் 16) பிற்பகல் 3 மணிக்கு இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் டிபிகேஎல் தகன அறையில் தகனம் செய்யப்படுமு் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.