செய்திகள் நாடும் நடப்பும்

27 மடங்கு உயர்ந்த உடல் உறுப்பு தானம்; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு பெரும் வெற்றி!


தலையங்கம்


இந்திய விடுதலைக்கு முன்னர் மட்டுமின்றி மன்னராட்சி காலத்திலும் கூட கடல் தாண்டிய நாடுகளுக்குச் சென்று வணிகம் தொடங்கி நெசவுத் தொழில், மருத்துவம், ஏற்றுமதி, அறநெறிகள் , வானியல் என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு எதிலும் முன்னோடியாக இருந்துள்ளது.

இந்திய விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவானதும் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில், பள்ளிகளில் இந்தியாவிலேயே முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.

அதேபோல முன்னாள் முதலமைச்சர் அண்ணா காலத்தில் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டமாகட்டும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வந்த குடிசை மாற்று வாரிய திட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களும் சட்டங்களும் இந்தியாவுக்கே பலவேளைகளில் உலகத்துக்கே வழிகாட்டுவதாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகிய சமூக மாற்றத்துக்கான புரட்சிகரமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இப்போது பல்வேறு மாநிலங்களும் அதனை பின்பற்ற தொடங்கி விட்டது. அந்த வரிசையில் கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்யும் பொதுமக்களின் இறுதிச் சடங்குகளில் இனி அரசு மரியாதையுடன் வழங்கப்படும் என்று 2023 செப்டம்பர் மாதம் 23 ந்தேதி அறிவித்து மருத்துவ துறையில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்.

அந்த அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறும்போது, உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அவருடைய அறிவிப்பை தொடர்ந்து தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் முன்பே தானம் செய்யப்பட்டிருந்ததால் கடந்த செப்டம்பர் 26 ந்தேதி, அவருக்கு முதன்முதலாக அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் அறிவித்த பின்னர் நிகழ்ந்த முதல் சம்பவம் என்பதால் இறந்த வடிவேலின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டதுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தியது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 5 வாரங்களிலேயே உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 27 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முதல் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்தவருமான டாக்டர் அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

உறுப்புதான திட்ட முன்னோடி

அவர் மேலும் கூறும்போது, தமிழ்நாடு முதலமைச்சருடைய இந்த அறிவிப்பு வெளியாகும் வரை மாதத்திற்கே 100 பேர்தான் உடல் உறுப்பு தானம் செய்து வந்துள்ளனர். அரசு மரியாதை என்றதும் மக்கள் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். இந்தியாவிலேயே உறுப்பு மாற்றுத் திட்டம் என்பது தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமை தமிழ்நாட்டையே சேரும். 2008 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உறுப்பு தானம் என்பது பற்றிப் பரவலாக விழிப்புணர்வே இல்லை. அப்படியான ஒரு காலகட்டத்தில் இதை யோசித்துச் செயல்படுத்தியவர்முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அன்றைக்கு நான் தான் அந்தத் திட்டத்தினை ஆரம்பித்தேன். முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். கடந்த கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகள் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. ஒரு ஆண்டில் 5 அல்லது ஆறு பேர்தான் செய்துள்ளனர். ஆகவே முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை ஒரு மருத்துவராக நான் மனதார வரவேற்கிறேன். கட்டாயம் இது ஒரு முன்மாதிரியான அறிவிப்பு மட்டுமல்ல; முற்போக்கான புரட்சிகரமான அறிவிப்பும்கூட. இந்தியாவில் பிற மாநிலங்களில் இப்படி யாரும் அறிவிக்கவில்லை.

இன்னும் அழுத்திச் சொன்னால் உலக அளவில்கூட வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்கூட இப்படி ஒரு திட்டம் நான் அறிந்தவரை அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவும் இல்லை. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தான் முன்னோடியாகத் திகழ்கிறார்.

அரசின் உயர்ந்த மரியாதை

அரசின் உயர்ந்த மரியாதை எது? இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை செலுத்துவதுதானே? இந்த மரியாதை சமூகத்தில் உயர்ந்த இடத்திலிருந்தவர்களுக்கு இதுவரைக் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் சேவையை மதித்து அரசு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தவிர அமைச்சர், முதலமைச்சர், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய பதவிகளை அலங்கரித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் ஒன்றுமே இல்லாத ஒரு சாதாரண குடிமகன், தனது உடல் உறுப்பை தானம் செய்யும்போது அவர்களுக்கு இணையான மரியாதை வழங்கப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய மரியாதை? அதை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கிக் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வெளியான பிறகு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கைதான் காரணம் என்று கூறி உள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய செயலாளர் கோபாலகிருஷ்ணன் நவம்பர் 8 ந்தேதி தெரிவித்திருந்தார். அதில், உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது என்று கூறிய அவர், ஒரு மாதத்திற்கு சுமார் 100 உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் மட்டுமே பெறப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்குப் பிறகு உறுப்பு தானம் பற்றிய மக்களின் எண்ணம் நேர்மறை மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உறுப்பு தானம் செய்பவர்கள் இரண்டு வகைப்படுவர். ஒன்று வாழும்போதே உடல் உறுப்பை தானம் செய்பவர்கள். இரண்டு இறந்த பிறகு அவரது உறவினர்கள் மூலம் உறுப்புகளை தானம் செய்பவர்கள்.

வாழும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகிறவர்கள் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். முன்பெல்லாம் சர்க்கரை வியாதி இருந்தால் உடலை தானம் செய்ய முடியாது. ரத்தக்கொதிப்பு இருந்தால் உடலை தானம் செய்ய முடியாது. ஆனால் இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியால் மருத்துவ உலகம் வெகுவாக முன்னேறிவிட்டது.

அதனால் யார் வேண்டுமானாலும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். பழைய தடைகள் எல்லாம் உடைந்துபோய் விட்டன. இறந்தவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் உடல் உறுப்பைத் தானம் செய்ய முடியும். ஒருவர் தன் இறப்புக்குப் பிறகு உறுப்பை தானம் செய்வதால் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்பதால் பலரும் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வருவது அவசியமானது.

உடல் உறுப்பு தானக் கோரிக்கையை இணையம் வழியாக செய்யவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. https://donorpledge.transtan.tn.gov.in/ என்ற இணைய முகவரி வழியாக ஆதார் தகவல்களை கொடுத்து தேவையான தகவல்களை தாக்கல் செய்வதன் மூலம் உடல் உறுப்பு தானத்தை செய்ய முடியும். https://transtan.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் முழுமையான விவரங்கள் தரப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அதற்கான விண்ணப்பங்கள் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்வது பொதுமக்களுக்கு எளிதாக உள்ளதும் பாராட்டத்தக்கது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *