பெர்லின், செப். 19–
உருமாற்றம் அடைந்த ‘XEC’ எனும் புதிய கொரோனா வைரஸ் தற்போது 27 நாடுகளில் வேகமாக பரவி வருவது குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வகையான ‘எக்ஸ்இசி’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று பரவி வருகிறது. கொரோனாவின் ஒமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள்.
வல்லுநர்கள் அச்சம்
ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வரும் XEC விரைவில் தீவிரமாக பரவும் மாறுபாடாக உருவாகக்கூடும் என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு பரவும் ஆபத்து அதிகரிக்கலாம் என்றும், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள், புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தால், தொற்று பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் மீண்டும் உலகம் முடங்கும் வகையில், புதிய கோவிட் அலையை இந்த வைரஸ் ஏற்படுத்தக் கூடும் என்றும் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
கொரோனாவின் இந்தப் புதிய திரிபு ஒமிக்ரானின் KS.1.1 மற்றும் KP.3.3 ஆகிய இரண்டு துணை வகைகளின் கலவையான வடிவமாக இருக்கும் சூழ்நிலையில், இந்த புதிய மாறுபாடு வீரியம் மிக்கதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனாவின் XEC மாறுபாடு பரவலை தடுக்க, தடுப்பூசி போடுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, முந்தைய கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெரிசல் மிகுந்த இடத்தில் முகமூடி அணிய வேண்டும், சரியான சமூக இடைவெளியைப் பேண வேண்டும், தூய்மையில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர் .