செய்திகள்

27ந் தேதி உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்: காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்

Spread the love

காஞ்சீபுரம், பிப். 19–-

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறைகளுக்கான

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய கருத்துக் கேட்பு கூட்டம் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறை விதிகள் 2017ன்படி. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சார்ந்த காஞ்சீபுரம் நகராட்சியின் வார்டுகள், 5 பேரூராட்சிகளின் வார்டுகள் மற்றும் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள் 1.2.2020 அன்று முதல் 8.2.2020 வரை மனுக்களாக பெறப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் 27ந்தேதி அன்று காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *