எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.கே., சாலை இப்போது கொஞ்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
காரணம் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் .நேற்று பெய்த மழையின் ஈரம் இரண்டு பக்கமும் தங்கி இருக்கும் தண்ணீர் என்று அந்த சாலையே திணறிக் கிடந்தது.
வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு கார் வைத்திருந்தால் தான் கவுரவம், மரியாதை, உசத்தி என்று என்ற பொய்யான பகட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
அதனால் சென்னை மாநகரம் முழுவதும் எந்தச் சாலையில் சென்றாலும் போக்குவரத்து நெரிசலை தாண்டாமல் யாரும் செல்ல முடியாது.
அது மாதிரி தான் என்.எஸ்.கே., சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது 25 ஜி என்ற பேருந்து .
பேருந்தில் ஆட்கள் நிறைய இருந்தார்கள். காலை நேரம் ஆதலால் அலுவலகப் பணி அத்தியாவசியப் பணி என்று கூட்டம் நிரம்பி வழிந்தது .
அத்தனை பேரும் வலியை தடவிவிட்டு வியர்வையை துடைத்தபடி தான் இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் பிரச்சினை அப்போ இருந்தது. ஆளுக்கொரு பிரச்சனையைச் சொல்லி அலுத்துக் கொண்டும் சலித்துக் கொண்டும் போக்குவரத்து நெரிசலை திட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
ஆனால் இவ்வளவு மெல்ல நகர்ந்து போகும் வாகனத்தை பார்த்ததும் அவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
டயர் ஏதும் பஞ்சர் ஆகிவிட்டதா? இல்லை பிரேக் எதும் பிடிக்காமல் இருப்பதற்காக ஓட்டுகின்றாராா? இவ்வளவு மெதுவாக ஓட்டுகிறாரே என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.
முன் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாத அளவிற்கு ஆட்கள் நின்று கொண்டிருந்ததால் ஓட்டுநர் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஓட்டுனர் எதற்காக இவ்வளவு நிதானமாக ஓட்டுகிறார் என்பது தெரிந்தது.
பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் யாருக்கும் விளங்கவில்லை. ஆனால் ஆளுக்கு ஒரு கற்பனையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சார்.. சீக்கிரம் போங்க நேரம் ஆகுது. ஆபீஸ் போகணும். நீங்க ஓட்டிட்டு போறதப் பாத்தா அண்ணா சதுக்கம் போறதுக்கு ரெண்டு நாள் ஆகும் போல என்று ஆளாளுக்கு ஆள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் உண்மை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
அன்று இரவு பெய்த மழையில் இடப்பக்கம், வலப்பக்கம் என்று தண்ணீர் தேங்கி .
சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் வாகனங்கள் மெல்லப் போவது உண்மைதான்.
ஆனால் 25 ஜி ரொம்ப மெல்ல போகிறதே? என்று பின்னால் இருந்த ஒருவர் எல்லோரையும் நகர்த்தி நகர்த்தி
சார் கொஞ்சம் தள்ளுங்க. கொஞ்சம் தள்ளுங்க என்று டிரைவரிடம் எதற்காக இப்படி ஓட்டுகிறார் என்று கேட்டு விடலாம் என்று தெரிந்துகொள்ளப் பாேனார்.
காரணம் 25 ஜிக்கு முன்னால் தூரத்தில் தான் கார் , வண்டிகள் சென்று கொண்டிருந்தன.
ஏன் வேகமாக ஓட்டக் கூடாதா? நிறைய இடைவெளி இருக்கிறதே என்று கேட்டு விடலாம் என்று ஒருவர் முன்னேறிய போது ,
அவர் கண்ட நிகழ்ச்சி அந்த ஓட்டுனருக்குக் கைகுலுக்கி நன்றி சொல்லத் தோன்றியது.
ஆனால் அவர் பேருந்து ஓட்டி கொண்டிருப்பதால் அப்படி செய்தால் விபரீதமாகும் என்று நினைத்து அந்த ஓட்டுநரின் தோளை தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார் அந்தப் பயணி .
போனவர் ஏன் ஓட்டுனரைத் தட்டிக் கொடுத்துவிட்டு வருகிறார் என்று பின்னால் இருந்த பயணிகளுக்கு தெரியவில்லை .
மற்ற பயணிகள் தட்டிக் கொடுத்த வரை கேட்டபோது
மனித நேயம் உள்ள ஓட்டுனர் இருக்கட்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை இன்னைக்கு ஆபீஸ் லீவ் போட்டாலும் பரவாயில்லை என்று அவராக பேசிக் கொண்டிருந்தவரை அவரைச் சுற்றி இருந்த பயணிகள் பார்த்தார்கள் .
என்ன இது இவ்வளவு நேரம் இவ்வளவு கோவமா பேசினவர் ஓட்டுநரைப் பார்த்ததும் பம்மி வராரு. அதுவும் பாராட்டுறாரு. என்னவாக இருக்கும் என்று பேசினார்கள்.
அடுத்து இன்னொரு பயணியும் போனார். அவரும் அந்தக் காட்சியை பார்த்து ஓட்டுனரைத் தட்டிக் கொடுத்து பாராட்டிவிட்டு நீங்க மெல்ல ஓட்டி போங்க. ஒன்னும் அவசரமில்ல என்றார் அந்தப் பயணியும்
அது என்னவென்று புலப்படாத பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் சொல்ல அப்போதுதான் புலப்பட்டது .
சாலையின் இரண்டு பக்கமும் சகதிகள் நிரம்பிக் கிடக்க சாலையை கடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி தன் இரண்டு கைகளிலும் கட்டை ஊன்றுகோல்களை வைத்து மெல்ல மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அந்த மாற்றுத்திறனாளியைத் தாண்டி செல்ல முடியாமலும் இடப்பக்கம் வலப்பக்கம் என்று எங்கும் ஒதுங்க முடியாத நிலை இருப்பதையும் அறிந்த ஓட்டுனர் தான் அப்படி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்று 25 ஜியில் பயணித்த பயணிகளுக்குத் தெரிய வந்தது.
அது வரையில் திட்டிக் கொண்டும் பொருமிக் கொண்டும் ஏசிக் கொண்டும் இருந்த பயணிகளுக்குள் மனிதநேயம் துளிர்விட்டது .
ஒருவர் படியில் நின்று கொண்டே அந்த மாற்றுத்திறனாளி மனிதரிடம் பேசினார் .
சார்,நீங்க எங்க போகணும். பஸ்ல ஏறுங்க என்றார் அந்தப் பயணி
அதைக் கேட்டுத் திரும்பிய அந்த மாற்றுத்திறனாளி
இல்ல சார் இடது பக்கம் வலது பக்கம் திரும்ப முடியல. பக்கத்தில தான் பேங்க் இருக்கு.அங்க தான் போறேன்.என்னால் திரும்ப முடியவில்லை. எல்லா இடத்திலும் சகதியா இருக்கு. அதுதான் நான் ஒதுங்க முடியல என்னை மன்னிச்சிடுங்க என்றார் அந்த மாற்றுத்திறனாளி
இதைக் கேட்ட அந்தப் பயணிகள்
ஒன்னும் இல்லங்க ; மெல்ல போங்க என்று அந்த பேருந்தில் இருந்த அத்தனை பேரும் சொன்னார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மாற்றுத்திறனாளி சொன்ன இடம் வந்தது .
அவர் திரும்பினார். அந்தப் பேருந்தில் இருந்த மொத்த ஆட்களும் அவருக்குக் கை காட்டினார்கள் .
இரு கைகளை எடுத்துக் கும்பிட்ட அந்த மாற்றுத்திறனாளி
என்ன மன்னிச்சிடுங்க என்றார்.
ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க பாேங்க என்று வழிமொழிந்தார்கள்.
அந்த மாற்றுத்திறனாளி தன்னுடைய வங்கிக்கு ஊன்றுகோலுடன் மெல்ல நடந்து கொண்டிருந்தார்.
இப்போது வேகம் எடுத்தது 25 ஜி.