செய்திகள்

24 வயதில் பிரபல மலையாள நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு

திருவனந்தபுரம், டிச. 09–

24 வயதேயான பிரபல மலையாள இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வயதினர் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் அவல நிலை அண்மை காலமாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், மலையாள நடிகையான லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இவர். கொரோனா காலக்கட்டத்தில் அஜூ அஜீஷ் இயக்கத்தில் வெளியான காக்கா திரைப்படத்தில் ‘பஞ்சமி’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், மலையாளத் திரையுலகில் லக்‌ஷ்மிகா மிகவும் பிரபலமானார்.

இருளை தாண்டிய ஒளி

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த லக்‌ஷ்மிகா, மலையாள சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தார். நடிப்பை தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் லக்‌ஷ்மிகா பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வங்கிப் பணியின்போதே லக்‌ஷ்மிகா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது. இந்த இளம் வயதிலேயே மாரடைப்பால் பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் மலையாளத் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ‘எல்லா இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கையைத் தருகிறது’ என்று லக்‌ஷ்மிகா இறுதியாக துபாயில் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மலையாள நடிகையின் இந்த திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *