சிறுகதை

24 பிரேம் – ராஜா செல்லமுத்து

பிரசாத் பெட்டிக்கடை வியாபாரி. வெற்றிலை, பாக்கு, புத்தகங்கள் பேப்பர்கள் என்று தொழில் நடத்தி வருகிறார் . ஆகா ஓகாே என்று வியாபாரம் இல்லை என்றாலும் 5க்கு 2 பழுது இல்லாமல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

தினசரி பத்திரிக்கையில் வரும் சினிமா செய்திகள். வார, மாத பத்திரிக்கையில் வரும் சினிமா செய்திகளைப் பார்த்து அவருக்கு அவரே சிரித்து கொள்வார்.

அடிக்கடி வந்து போகும் நண்பர்கள் பிரசாத்திடம் சினிமா பற்றிப் பேசுவார்கள்..

டிஜிட்டல் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னால் பிரசாத் மாதிரி நிறைய ஆட்கள் ஸ்டுடியோக்களில் இருந்தார்கள். ஆனால் டிஜிட்டல் என்ற தொழில்நுட்ப வந்த பிறகு பிரசாத் போல பெட்டிக்கடை, கல்யாண மண்டப காவலாளிகள் என்று வயதிற்கு ஏற்ப தொழிலை மாற்றிக் கொண்டு போய்விட்டார்கள்.

அன்று எப்போதும் வழக்கமாக பிரசாத் பெட்டி கடைக்கு வரும் நாகி பிரசாத்திடம் பேச்சு கொடுத்தார் .

என்ன பிரசாத் இப்ப இருக்கிற சினிமா பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்டபோது

அந்தக் காலத்துல இருந்த நல்ல கதைகள் எல்லாம் இப்ப வர்றது இல்ல. ஏன் நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் கூட இல்ல என்று அங்கலாய்த்துக் கொண்டார்

சினிமாவை மட்டுமே நம்பி இருந்த ஒரு தொழிலாளி பிரசாத். இப்போது சினிமா டிஜிட்டலுக்கு மாறியதால் பிரசாத்திற்குத் தெரிந்த ஃபிலிம் தொழில்நுட்பம் இப்போது இல்லாமல் போனது.

மூவியாலா, ஸ்டீம் பெக் என்று கைகளால் பிலிமை எடிட்டிங் செய்து திரையரங்கிற்கு கொடுக்கும் வேலையெல்லாம் இப்போது ஒன்றும் இல்லாமல் போனது.

கேண்ட் ஜாயினிங், பட் ஜாயினிங், ஸ்பிளைசர் ஜாயினிங் என்று பிலிமை ஒட்டுவதும் வெட்டுவதும் சிங்க் செய்வது தான் அவரின் வேலையாக இருந்தது.

ஸ்பூல், பிலிம், கேமரா, லோடிங் என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பிரசாத்திற்கு இப்போது இருக்கும் டிஜிட்டல் உலகம் புரியவில்லை.

அவருக்கு தெரிந்ததெல்லாம் மேனுவலாக அதாவது கையை கொண்டு வேலை செய்யும் தொழில்நுட்பத்தை தான் அவர் செய்து கொண்டிருந்தார் .

ஒரு ஒரு செகண்டுக்கு 24 ஃபிரேம்ஸ். ஒரு அடிக்கு 16 ஃப்ரேம். ஒரு பிரேமுக்கு நாலு பர்ப்பரேஷன். என்று அத்தனையும் அத்துபடியாக வைத்திருந்த பிரசாத்திற்கு இப்போது வேலை இல்லை.

தொழில்நுட்பம் அவரை துவளச் செய்தது. மாறிவரும் டிஜிட்டல் யுகத்திற்கு பிரசாத்தால் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை .

கம்ப்யூட்டர், விஷுவல் டிஸ்க் பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க் என்று மொத்த தொழில் நுட்பமும் பிரசாத் போன்ற தொழிலாளர்களை புரட்டிப் போட்டது.

பிராஸசிங் என்ற பிலிம் கழுவும் வேலையெல்லாம் இப்போது இல்லை .

கலர் கரெக்சன் செய்யும் பெரிய பெரிய மிசின்களும் இப்போது இல்லை. எல்லாம் கம்ப்யூட்டரில் அடங்கி விட்டதால் பிரசாத் போன்ற மனிதர்களால் அந்த தொழில்நுட்பத்திற்கு வர முடியவில்லை .அவர்களுக்கு அது தெரியவும் இல்லை .

சினிமா பலரை வாழ வைத்திருக்கிறது. சிலரைச் சீரழித்திருக்கிறது. அதில் பிரசாத் போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள்.

என்றைக்கு ஃபிலிம் இல்லாமல் போனதோ அன்றைக்கே பெரிய பெரிய ஸ்டுடியோக்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நிறையப் பேர் வெளியேற்றப்பட்டார்கள். அதில் பிரசாத்தும் ஒருவர் என்று நாகி சாென்னார்.

அப்படி எல்லாம் இல்ல நாகி. ஏதோ நம்ம நேரம் .மாறி வார தொழில்நுட்பத்துக்கு தகுந்தது மாதிரி நம்முடைய சிந்தனையையும் மாத்திக்கணும். உலகம் மாறி கொண்டே தான் போகும் .ஆனா உலகத்தோடு நாமளும் மாறிக்கிட்டுப் போனாத்தான் இந்த உலகத்தோட சமகாலம் மனிதனோட நாம வாழ்க்கை நடத்த முடியும் . இல்ல… என்னை மாதிரி பின்தங்கி தான் இருக்கணும். நீ இப்ப செஞ்சுகிட்டு இருக்கிற வேலையை நல்லா செய் . அடுத்து 10 /20 வருஷத்துக்குப் பின்னாடி வார தொழில்நுட்பத்தையும் இப்பயே கத்துக்க. அப்படி கத்துக்கிட்டேனா நிச்சயமா என்னோட நிலைமை உனக்கு வராது என்று சொன்னார் பிரசாத். அதற்கு எதுவும் பேசாமல் தலையை மட்டுமே ஆட்டினார் நாகி.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பெட்டிக்கடைக்கு ஆட்கள் வந்து போனார்கள். அப்போது அங்கே வந்த ஒருவர் வண்ணத்திரை கேட்டார் .

அந்த வார சினிமா செய்திகளை தாங்கிய வண்ணத்திரையை வாடிக்கையாளருக்கு எடுத்து கொடுத்தார் பிரசாத்.

கடைக்கு வெளியே தொங்கும் வால்போஸ்டர்களின் சினிமா செய்திகள் சிரித்துக்கொண்டிருந்தன.

எத்தனையோ சினிமா தொழில்நுட்பங்களைத் தெரிந்து வைத்திருந்த பிரசாத் பெட்டிக்கடையில் உட்கார்ந்திருந்தார்.

இன்றைய சினிமா செய்திகள் காற்றில் கரைந்து கொண்டு இருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *