செய்திகள் நாடும் நடப்பும்

24வது கார்கில் வெற்றி நாள்: நினைவிடத்தில் மரியாதை

ராணுவத்திற்கு மக்கள் உதவி செய்ய ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

லடாக், ஜூலை 26–

இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக வேண்டும். ராணுவத்திற்கு மக்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் 1999-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இதுவே, கார்கில் போர் என்றழைக்கப்படுகிறது.

இதில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் வீழ்த்தியதையொட்டி ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24வது கார்கில் போர் வெற்றி நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு லடாக் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமைத் தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

லடாக் எல்லைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கார்கில் போர் நினைவிடத்திற்கு மேல், நான்கு மிக் 29 ரக போர் விமானங்கள் பறந்து அஞ்சலி செலுத்தின.

ராணுவத்திற்கு சொந்தமான சீட்டல் ஹெலிகாப்டரும் போர் நினைவிடத்திற்கு மேல் பறந்து மலர் தூவி மரியாதை செலுத்தின.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:–

நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வீர தீர செயல்கள் வரலாற்றில் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

இன்று நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் அவர்களின் தியாகம் தான். இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக வேண்டும். அதேபோல் அண்மை காலமாக போர்கள் நீடித்து வரும் நிலையில் ராணுவத்திற்கு மக்கள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

பாகிஸ்தானுடனான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முயற்சி செய்தது. நமது தேச நலன் என்று வரும்போது நமது ராணுவம் பின்வாங்காது. நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பாதுகாப்புத்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி

கார்கில் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் அற்புதமான, துணிச்சலானவர்களின் வீர சாகசத்தை முன்னுக்கு கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில் அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *