புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கிறார்கள்
புதுடெல்லி, ஜூன் 12–
வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 71 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் கூடும் தேதி விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 24-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:- 18-வது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற 24ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை நடக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல், ஜனாதிபதி உரை மற்றும் விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும் என கூறியுள்ளார்.
அந்த வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் 3 நாட்கள் புதிய எம்.பி.க்.களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.
தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27–ந்தேதி அன்று உரையாற்ற உள்ளார். அவர் புதிய அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை தனது உரையில் தெரிவிப்பார்.
ஜனாதிபதி உரைக்கு பிறகு பிரதமர் மோடி தனது மந்திரி சபையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து கூட்டத்தொடர் ஜூலை 3ம் தேதி நிறைவடைகிறது.
இந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுப்பார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.