போஸ்டர் செய்தி

22 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: எடப்பாடி உறுதி

கோவை, மே.15–
22 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தோல்வி பயத்தில் ஸ்டாலின் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
அண்ணா தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால் ஸ்டாலின் ஏன் கொதிக்கிறார் என்றும் முதலமைச்சர் கேட்டார்.
வரும் 19–ந் தேதி அன்று 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். அண்ணா தி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (14–ந் தேதி) அன்று பொது மக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் ஒரே கட்சி அண்ணா தி.மு.க. சூலூர் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பாக வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வந்த கனகராஜின் எதிர்பாராத மறைவையொட்டி தற்போது இங்கு தேர்தல் நடைபெறுகிறது. அண்ணா தி.மு.க. வேட்பாளராக வி.பி.கந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு நீங்கள் வாக்களித்து அவர் வெற்றி பெற்றால் இந்தப் பகுதி மக்களுடைய குறைகளை நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றி வைப்பார்.
88 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
என்ன செய்தார்கள்?
ஆனால் எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களித்து அவர் வெற்றி பெற்றால் இந்தப்பகுதிக்கு எந்த விதமான திட்டத்தையும் அவர்களால் கொண்டு வர முடியாது. தற்போது சட்டமன்றத்தில் 88 தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் என்னைச் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. அவ்வாறு இருக்கையில் அந்த தொகுதிக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்த கட்சி வேட்பாளார் வெற்றி பெற்றால் இந்தப்பகுதிக்கு நன்மை செய்வார் என்பதை அறிந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பி அதன் மூலம் வாக்குகளைப் பெற நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது.
ஆனால், அண்ணா தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
தினகரன் சதி நடக்கவில்லை
டி.டி.வி.தினகரன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக புரட்சித்தலைவி அம்மாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, 10 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஆனால், அவர் தற்போது புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, ஏதோ மக்கள் செல்வாக்கு இருப்பது போல காட்டிக் கொண்டிருக்கிறார். எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றாரோ, அந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல்வேறு வகையில் அவர் சதி செய்தார். ஆனால், அது நடைபெறவில்லை.
18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அண்ணா தி.மு.கவில் இருந்து பிரித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்தவர் தினகரன். கட்சிக்கு துரோகம் செய்த தினகரன் இந்த தேர்தலோடு விரட்டியடிக்கப்பட வேண்டும். தி.மு.கவும், அ.ம.மு.கவும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
ஒரு தலைவர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம் பேசும் போது மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வர முடியும், எவ்வாறு நன்மை செய்ய முடியும் என்பதை பேசாமல், நான் அழகாக இருக்கிறேன், தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தற்போது கறுத்து விட்டேன் என ஸ்டாலின் பேசுவது தலைமைப் பண்புக்கு அழகா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட தன்னைப் பற்றி பேசியது கிடையாது. ஆனால் ஸ்டாலின் பேசி வருகிறார். இது போன்ற செயல்களை வாக்காளப்பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஸ்டாலின் இரட்டை நிலை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என அறிவித்தார். ஆனால் தற்போது தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவ்வை சந்தித்துப் பேசுகிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. ஏற்கனவே மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. அதன் முடிவு வருகின்ற 23–ம் தேதி அனைவருக்கும் தெரியவரும்.
இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குற்றம் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை நிச்சயம் உருவாக்கிக் காட்டுவோம். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம்
புரட்சித்தலைவி அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றிடும் வகையில் இப்பகுதி விவசாயப் பெருமக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடி செலவில் நிறைவேற்றிட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விடுபட்ட பகுதியான பள்ளப்பாளையம், அரசூர், கனியூர், பத்திரியாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் நீர் நிரப்பிட இரண்டாம் கட்ட திட்டமும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். கௌசிகா நதி பாதையில் உள்ள கழிவுநீரை சம்ப் சிஸ்டம் மூலம் சுத்திகரித்து, அதை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் கரையோரப்பகுதிகளில் மரங்கள் நட்டு வளர்க்கப்படும். கொடிசியா தொழிற்பூங்காவில் கிளை 200 ஏக்கர் பரப்பில் கண்ணம் பாளையத்தில் ராணுவ உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 304 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 5 லட்சம் நபர்களுக்கு மறைமுகமாவும், 5 லட்சம் நபர்களுக்கு நேரடியாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். தரமான சாலைகள், பாலங்கள், மின்சார வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, சட்டம் ஒழுங்கு பேணிக்காத்தல் ஆகியவற்றின் காரணமாக தொழிற்தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
இருகூர் பேரூராட்சியில் ரூ.22.50 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்னியம் பாளையம் ஊராட்சியில் ரூ.5 கோடி மதிப்பிலும், மகிழம்பாடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பிலும், நீலாம்பூர் ஊராட்சியில் ரூ.2.25 கோடி மதிப்பிலும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்ததந்த ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்டாலினுக்கு தோல்வி பயம்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தின் காரணமாகவே பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அது மட்டுமல்ல அண்ணா தி.மு.கவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், கழகத்தின் கொறடா சம்மந்தப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஆதாரத்துடன் புகார் மனுவினை சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்தார்கள்.
புகார் மனு கொடுத்த உடனே ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்தே நன்றாக தெரிகின்றது. தி.மு.க.விற்கும் சம்மந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
தி.மு.க. தலைவருக்கும் சம்மந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்ன தொடர்பு? எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கழக கொறடா புகார் மனு அளிக்கின்றார் அதற்கு தி.மு.க. தலைவர் ஏன் கொதிக்கின்றார்? ஏன் ஆதங்கப்படுகின்றார்? இதிலிருந்து உண்மை வெளிப்பட்டிருக்கின்றது. தி.மு.கவிற்கும் அ.ம.மு.கவிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு டி.டி.வி.தினகரன் மூலமாக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. மக்கள் தான் நீதிபதிகள், அவர்கள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும், அந்த வகையில் 22 சட்டமன்ற தொகுதியிலும் அண்ணா தி.மு.க. கழக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, இது போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *