திசையை மாற்ற நாசா விஞ்ஞானிகள் முயற்சி
வாஷிங்டன், செப். 22–
பூமியை 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும் சிறுகோள் ஒன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக கண்டுபிடித்துள்ள நிலையில், அந்த சிறுகோளின் திசையை மாற்ற, நாசா விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சூரியக்குடும்பத்தில் எப்படி ஒவ்வொரு கோளும் சூரியனை சுற்றி வருகின்றதோ அதுபோல, சிறுகோள் எனப்படும் ஆஸ்ட்ராய்டுகளும் சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் சூரியனை சுற்றி வருவதை அறிவோம். சூரியனை நீள்வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி வருவதைப் போல் சிறுகோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த பல்லாயிரக்கணக்கான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சிறுகோள்கள், பெரும்பாலும் வளிமண்டலத்திற்கு முன்பே எரிந்து சிதைந்துவிடும். மிக அரிதாக சில விண்கற்கள் பூமியின் மீது மோதுவதுண்டு. இந்த நிலையில், சிறுகோள் ஒன்று பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளானது பூமியின் மீது தாக்கினால் 22 அணுகுண்டுகள் வீசியது போன்ற ஒரு பேராபத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
159 ஆண்டுகளுக்கு பிறகு…
பென்னு என்ற இந்த சிறுகோள் ஒவ்வொரு 6 ஆண்டுக்கு ஒருமுறை, நமது பூமியை கடந்து செல்கிறது. எனினும், இந்த சிறுகோள் வரும் 2182 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இந்த சிறுகோளை திசை திருப்பிவிடுவதற்கான வேலையில் நாசா விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பென்னு என்ற இந்த சிறுகோள் டைனோசர் அழிவுக்கு காரணமாக சிறுகோளின் அளவில் பாதியளவு இருக்கக் கூடும் என்றும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவானதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நாசா, இந்த சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் சிறுகோளின் மாதிரிகளை சேகரித்து இந்த வாரத்தில் பூமிக்கு திரும்பும் போது பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.