இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன்.11-
சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்பட 211 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக நடக்கும் திருப்பணிகளை தொடங்க மாநில வல்லுனர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் மாதம் இரு முறை மாநில அளவிலான வல்லுனர் குழு கூட்டம் நடந்து வருகிறது.
அதன்படி மாநில அளவிலான வல்லுனர் குழு கூட்டம் நேற்று இணை கமிஷனர் (திருப்பணி) ஜெயராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம், லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில், திருநாகேசுவரம், சந்தன மாரியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர், மார்க்கசகாய சாமி கோவில், திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரசாமி கோவில், சிவகங்கை மாவட்டம், கல்லாங்குடி, காளீசுவர வினாயகர் கோவில், கானாடுகாத்தான், கரைமேல் அய்யனார் கோவில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ரெகுநாதபுரம், சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு மாவட்டம், ஈரோடு மணிக்கூண்டு, கொங்காலம்மன் கோவில், திருமங்கலம், அம்மனீசுவரர் கோவில், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், வீரஆஞ்சநேயர் கோவில், மங்களூர், காளஅகஸ்தீசுவரர் கோவில், திருச்சி மாவட்டம், லால்குடி, தியாகராஜ சாமி கோவில், திருபைஞ்சீலி, ஞீலிவனேசுவரர் கோவில்.
சென்னை மயிலாப்பூர், அங்காளபரமேசுவரி கோவில், நெற்குன்றம், திருவாலீசுவரர் கோவில், கொண்டிதோப்பு, செல்வ வினாயகர், பழனி ஆண்டவர் தாது குருசாமி கோவில், கொத்தவால் பஜார், ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சாமி கோவில், சைதாப்பேட்டை, கடும்பாடி சின்னம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம், வாஞ்சிவாக்கம், அகத்தீசுவரர் கோவில் உள்ளிட்ட 211 கோவில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில அளவிலான வல்லுனர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். கும்பாபிஷேகத்திற்கு முன்பாக நடக்கும் இந்த பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில், தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட 211 கோவில்களையும் சேர்த்து 8 ஆயிரத்து 848 கோவில்களுக்கு மாநில வல்லுனர் குழுவினால் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இக்கூட்டத்தில் ஆகம வல்லுனர்கள் சந்திரசேகர பட்டர், அனந்தசயன பட்டாச்சாரியார், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுனர்கள் வெ.ராமமூர்த்தி, சீ.வசந்தி, வடிவமைப்பாளர் டி.சத்தியமூர்த்தி, கட்டமைப்பு வல்லுனர் கே.முத்துசாமி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.