நியூயார்க், அக். 22–
2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் பிறந்தது ஆப்பிரிக்கா என்பதால் போட்டியிட மாட்டேன் என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பாக, கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பேசி வந்த எலான் மஸ்க், தற்போது டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அரசியலில் ஈடுபட மாட்டேன்
இந்நிலையில், அமெரிக்காவில் ‘வோட் ஏர்லி (Vote Early)’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எலான் மஸ்கிடம், “2028-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய தாத்தா அமெரிக்கர். ஆனால், நான் பிறந்தது ஆப்பிரிக்காவில். அதனால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனக்கும் அதிபர் ஆக வேண்டாம்… ராக்கெட் மற்றும் வாகனங்களைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பும் இதைத்தான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.
எனக்கு விண்வெளி ஆராய்ச்சியிலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஆர்வம் அதிகம். அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேலும் மக்களுக்கு உதவிக்கரமான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். நான் டிரம்ப் அதிபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர், அதிபர் ஆன பின் குடியரசுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அதன் பிறகு, நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.