கோவை, நவ.6-–
மக்களின் வரவேற்பே சாட்சியாக இருப்பதால் 2026–-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் கோவை போத்தனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–-
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெறவேண்டும். நம்முடைய கட்சிக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும். எனவே நமது சாதனைப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.
இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பதுதான் மிக முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்துக்கான விதைகள். எனவே, பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 முதல் 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியாக வேண்டும். அதற்கான முதல் சந்திப்புதான் இந்தக் கூட்டம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. நான் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன்.
200 தொகுதிகளில் வெற்றி என்பதுதான் அந்த இலக்கு. அதனால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். எழுச்சிமிகு தி.மு.க. ஏழாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க எந்நாளும் உழைப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டம் முடிந்ததும் இரவு 8.15 மணிக்கு திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-–
கேள்வி:- தங்க நகை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்களே, அவை நிறைவேற்றப்படுமா?
பதில்:- தங்க நகை தொழிலாளர்கள் பல கோரிக்கைகள் வைத்து உள்ளனர். அந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும். தங்க நகை பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
கேள்வி:- கோவை மக்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
பதில்:- கோவை மக்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக இருந்தது. 2026–-ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மக்களின் வரவேற்பே சாட்சியாக உள்ளது.
கேள்வி:- கட்சி ரீதியாக கோவை மாவட்டத்தை விரிவுப்படுத்த திட்டம் உள்ளதா?
பதில்:- கட்சி முடிவு செய்யக்கூடிய விஷயங்களை வெளியே சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.