செய்திகள்

2026–ம் ஆண்டு தேர்தலில் 7வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சி தான்:

Makkal Kural Official

முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை, ஏப்.29–

இதுவரை தமிழ்நாட்டில் செயல்படுத்தி இருக்கும் திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் வரும் 2026–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் 7வது முறையாக தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார்.

ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில் கூறியதாவது:–

தி.மு.க. ஆறாவது முறையாக ஆட்சியமைத்து நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று நான் பொறுப்பேற்ற மே 7–ம் தேதிக்கு இன்னும் 7 நாட்கள் தான் இருக்கிறது. இந்த நேரத்தில், இதுவரை செயல்படுத்தியிருக்கக்கூடிய திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் ஏழாவது முறையும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

என்னுடைய 60 ஆண்டு கால பொது வாழ்க்கையை, ஒரே சொல்லில் குறிப்பிடுகிற மாதிரி, கலைஞர், “ஸ்டாலின் என்றால் உழைப்பு – உழைப்பு – உழைப்பு” என்று சொன்னார். அவர் இன்றைக்கு நம்மோடு இருந்திருந்தால், “ஸ்டாலின் என்றால் சாதனை – சாதனை – சாதனை” என்று நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாகச் சொல்லியிருப்பார் என்பதை மிகவும் பணிவாகவே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால், கலைஞர் இப்போது இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்துத்தான் ஒவ்வொரு நாளும் நான் செயல்படுகிறேன்; திட்டங்களைத் தீட்டுகிறேன். கலைஞரின் எண்ணங்கள்தான் இந்த அரசினுடைய செயல்கள். அந்தச் செயல்களால் விளைந்ததுதான் இத்தனை சாதனைகள் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாகச் சீர்கேட்டால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய், கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டு இருந்தது. ஊர்ந்து கொண்டிருந்த இந்த இழிவைப் போக்கி, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள். மக்களுடைய நம்பிக்கைக்கேற்ப தமிழ்நாடு இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் தலைநிமிர்ந்து இருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி இந்த மாமன்றத்தில் துணிச்சலுடன், பெருமையுடன் நான் சொல்லிக் கொள்கிறேன்.

சாதனைப் பட்டியல்

இது சாதாரண சாதனை இல்லை; கடும் உழைப்பால் விளைந்த சாதனை; இதுவரை தமிழ்நாடு பார்க்காத சாதனை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத சாதனை. நம்முடைய திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய உயரத்தின் அளவை, தமிழ்நாடு செய்திருக்கக்கூடிய சாதனைகளை, மிகவும் அன்போடு, பண்போடு, அடக்கத்தோடு இந்த மாமன்ற உறுப்பினர்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

2024-–25–ம் ஆண்டில் இந்தியாவிலே நெ.1 ஆக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றிலே இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்ததில்லை. இதை நான் சொல்லவில்லை. எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு என்றால் ஓரவஞ்சனையோடு செயல்படும் ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே சொல்லியிருக்கிறது. நம்முடைய வளர்ச்சி 9.69 விழுக்காடு. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவினுடைய வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? 6.5 விழுக்காடு! இதுதான் சாதனை!

தமிழ்நாட்டினுடைய ஜி.எஸ்.டி.பி. 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்திருக்கின்றது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2024–-25–ம் ஆண்டில் 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்; தேசிய சராசரி 2 லட்சத்து 6 ஆயிரம் தான். இதுவரை இல்லாத உச்சமாக, 14.65 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு கடந்த 2024–-2025 நிதியாண்டில் சாதனை படைத்திருக்கிறது.

எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் 41.23%

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் ஏற்றுமதி அளவில், தமிழ்நாடு மட்டுமே 41.23 விழுக்காடு பங்கு வகிக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட பாதி அளவு. கடந்த நான்காண்டுகளில் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வணிக வரியாக வந்திருப்பதே, நம்முடைய வளர்ச்சிக்கான சான்று.

அகில இந்திய அளவில் 50 விழுக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வக வசதிகள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 98.3 விழுக்காடு பள்ளிகளில் இந்த வசதி இருக்கிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரைக்கும், கடந்த 4 ஆண்டுகளில் நம்முடைய அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்கள் காரணமாக, நம்முடைய நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை. இந்திய அளவில் 28.4 விழுக்காடாக இருக்கின்ற உயர்கல்வி சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 47 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதிகமாக பி.எச்.டி படிக்கிற மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம்.

N.I.R.F ரேங்கிங்கி-ல் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில், தமிழ்நாட்டில் இருக்கின்ற 18 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மிகச் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது. இந்தச் சமூக முன்னேற்றக் குறியீட்டில், பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் 11.2 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகிற நிலையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் 1.43 விழுக்காடுதான். அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தையும் முன்னேற்றுவதற்காகத்தான் தாயுமானவர் திட்டத்தின்மூலம் திராவிட மாடல் அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

எளிய மக்களையும் மருத்துவச் சேவைகள் சென்று சேர வேண்டுமென்று உருவாக்கி, 2 கோடியே 25 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிற மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. அமைப்பினுடைய விருதைப் பெற்றிருக்கிறது.

நேற்றுகூட ஒரு செய்தி வந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, தொற்றா நோய்களின் கட்டுப்பாடு குறித்து ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் நடத்திய சர்வேயில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிகமான எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்ற இடமும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலேயும் இல்லாத அளவிற்கு, நம்முடைய அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 733 மருத்துவப் படுக்கைகள் இருக்கின்றன.

தொழில் துறையில்

தமிழ்நாடு நம்பர் 1

தொழில் துறையைப் பொறுத்தவரைக்கும், 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகளுடன் நாம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். 27 லட்சத்து 75 ஆயிரம் நபர்கள் பணிபுரிகிறார்கள். 5.35 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளோடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றோம். திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களால், தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்திலே 47 விழுக்காடுடன் இந்தியாவிலேயே நம்பர்- 1 ஆக இருக்கின்றோம்.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். சூரிய சக்தியில் நான்காவது இடம்! புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் Best Performer! Startup தரவரிசைப் பட்டியலில், 2018–-ல் கடைசி இடத்தில் இருந்த நிலையை மாற்றி, 2022–ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறோம்.

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதல் இடம்! தோல் பொருட்கள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலம்! எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம்! மக்காச்சோளம் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம்! நெல் உற்பத்தித் திறனில் மூன்றாம் இடம்! ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பதைக் குறைத்திருக்கிறோம். எடை குறைவாக பிறந்த குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கிறோம்.

இந்திய நீதி அறிக்கையின்படி, தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம். இப்படி சாதனைக்கு மேல் சாதனையைச் செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு; இந்தச் சாதனைகளையெல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு, – கீழே நரிகள்; குதித்தால் அகழி – ஓடினால் தடுப்புச் சுவர்கள். இதற்கெல்லாம் இடையில் மாட்டிக்கொண்ட மனிதனைப் போல ஒருபக்கம் ஒன்றிய அரசு – மறுபக்கம் ஆளுநர் – இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளைக் கடந்து நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இது.

இவையெல்லாம் ஸ்டாலின் என்ற தனிமனிதனுடைய சாதனைகள் அல்ல; என்னுடைய அமைச்சரவை, அதிகாரிகள் – அவர்களுடைய கூட்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன். எல்லாவற்றிலும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவன் இல்லை நான். இது ஒரு கட்சியினுடைய அரசு அல்ல. ஒரு கொள்கையினுடைய அரசு என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம்.

இதுவரை இருந்த அரசுகளை காமராசர் அரசு – அண்ணா அரசு – கலைஞர் அரசு – எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்வது வழக்கம். அந்த வரிசையில் இதனை ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல், திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன். ஒரு தனி மனிதனின் ஆட்சி அல்ல. ஒரு தத்துவத்தின் ஆட்சி என்பதன் அடையாளமாகத்தான் திராவிட மாடல் அரசு என்று சொன்னேன். என்னைப் பொறுத்தவரைக்கும், கொள்கையும் இயக்கமும்தான் முன்னிலை பெற வேண்டும்; வலிமை பெற வேண்டும்.

ஏற்றத்தாழ்வற்ற

மனித உரிமைச் சமூகம்

தமிழ்நாடே சமத்துவபுரம் ஆக வேண்டுமென்று திராவிட கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களைத் தீட்டுகிறோம். நம்முடைய தமிழ்ச் சமூகம், சிந்தனையால், பண்பாட்டால், பழக்க வழக்கங்களால் உயர்வடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமைச் சமூகமாக வளர வேண்டும்.

சுயமரியாதை – சமூகநீதி – சமத்துவம், – சகோதரத்துவம், – மதச்சார்பின்மை – கூட்டாட்சிக் கருத்தியல் – அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் – அதற்காகத்தான் உழைக்கின்றோம்.

கடந்த மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கையையும், 15–ம் நாள் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தோம். அதைத் தொடர்ந்து, நம்முடைய அவை முன்னவர், மூத்த அமைச்சர் துரைமுருகனுடைய நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை தொடங்கி, வரிசையாக ஏப்ரல் மாதம் முழுவதும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய துறைகள் சார்பிலான மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்தத் துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசுகிறபோதுகூட, பல்வேறு அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.

இதெல்லாம் அறிவிப்புகள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான மைல் கற்கள்!

யார் சிறப்பாக செயல்படுவது என்று ஒவ்வொரு துறைக்கு இடையிலும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு துறையும், வெல்லும் துறையாக செயல்பட்டு வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

“அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி”-என்று குறிப்பிட்டு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு ஏற்றம் அளிக்கும் மாதமாக அமைந்ததால் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறேன்.

அமைச்சர்கள் இந்த மாமன்றத்தில் பேசும்போது, தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம் வளர்ந்திருக்கிறது… அவர்களின் துறைகள் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டு பேசினார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

அமைதியான மாநிலம்

இந்த அவையை மாண்பு தவறாமால் கண்ணியத்துடன் கட்டுக்கோப்பாகவும் மக்களாட்சி இலக்கணம் சொல்லும் வகையில் வழிநடத்திய பேரவைத் தலைவருக்கும், பேரவை துணைத் தலைவருக்கும் இந்த மாமன்றத்தின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான – முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறை தான் காரணம்.

ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும்; தொழிற்சாலைகள் வரும்; கல்வி மேம்படும்; பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள்; விளையாட்டுத் துறை மேம்படும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும்; சுற்றுலா பயணிகள் வருவார்கள்; கோயில்கள் தழைக்கும்!

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், என்னுடைய துறையான, காவல்துறை!

கலவரங்களை

மக்கள் முறியடிப்பர்

சட்டம் – ஒழுங்கை முறையாக பேணி, இந்த சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறை சார்ந்த அனைவருக்கும் நானும் – நீங்களும் – தமிழ்நாட்டு மக்களும் நன்றிக்குரியவர்கள்!

சட்டம் – ஒழுங்கு சீராகவும் – தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ – மதக் கலவரங்களோ – பெரிய கலவரங்களோ – வன்முறைகளோ இல்லை. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் – ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது!

நான் இன்னும் சொல்கிறேன், குற்றச் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால்கூட அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்”-என்று பிடிவாதமாக இருப்பவன் இல்லை நான். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துகளையும் கவனித்து – ஆராய்ந்து – சரியானவற்றை சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்!

உள்நோக்கத்தோடு – அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்:

இது, மணிப்பூர் அல்ல! இது, காஷ்மீர் அல்ல! உத்தரப் பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை!

இது, தமிழ்நாடு! அதை மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *