சென்னை, ஜூலை19-
2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 7வது நாளான நேற்று காலையில் பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டமும், மாலையில் கோவை தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி தொகுதிக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இல்லாத காரணத்தால்தான் வெற்றி பெற முடியவில்லை என்று கருத்து தெரிவித்து உள்ளனர். இதே போன்று நீலகிரி தொகுதி நிர்வாகிகள் பிரபலமான வேட்பாளர் இல்லாததால் நாம் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ‘நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் நமது வாக்குகள் குறையவில்லை
நாம் கூட்டணியை எதிர்பார்க்காமல் திறம்பட செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எனவே, தோல்வியை கண்டு துவண்டு போகாமல் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுங்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். மேலும், வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும் வழக்கம் போல் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி, இன்று காலையில் விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டமும், மாலையில் ஆரணி தொகுதிக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.