செய்திகள்

2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி தாக்கல்

Makkal Kural Official

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை, பிப். 18–

2025–2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-–2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான மார்ச் மாதம் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1ன் கீழ், பேரவையின் அடுத்தக் கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் மார்ச் 14–ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்குக் நடைபெறும். அன்றைய தினம் 2025-–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். மார்ச் 15–ந் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

மேலும், பேரவை விதி 193/1-இன் கீழ் 2025 -2026-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189/1-இன் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினையும் மார்ச் 21, 2025 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். எனவே மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்களால் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *