மும்பை, மார்ச் 10–
2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைமை நிர்வாகி அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் 22–ந் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். சிஎஸ்கே அணியிலிருந்து தொடக்க வீரர் டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும், அணியில் ரச்சின் ரவீந்திரா, மிட்செல் மார்ஷ், சமீர் ரிஸ்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆதலால், சிஎஸ்கே அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த நிலையில் தான் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட இருப்பதாக ஐபிஎல் நிர்வாக அதிகாரி அருண் துமால் கூறியுள்ளார். ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். அதுதான் கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கும். ஐபிஎல் தொடரும் சிறப்பாக இருக்கும். அடுத்த மெகா ஏலம் நிச்சயம் இன்னும் பெரியளவில் இருக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதிய வீரர்கள் நிச்சயம் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.