சென்னை, டிச.9–
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் எப்போது நடைபெறும். வீர வசந்தராயர் கோவில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்? என்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:–
அடுத்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவில் பணிகளை பொறுத்தவரையில் 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சிய 23 பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எங்களின் பக்தனான செல்லூர் ராஜூக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.வீர வசந்தராயர் கோவிலில் 2018ல் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு, அப்போதைய அரசால் நியமிக்கப்பட்ட குழு 3 ஆண்டுகளில் சிறுசிறு பணிகளை மேற்கொண்டது. தற்போது மண்டபத்தை புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகிறது. இதற்காக, ஒரே அளவான கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே, ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கூறினார்.