அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
சென்னை, ஜூலை 10-
2024–25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக வரித்துறை கடந்த ஆண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறினார்.
வணிக வரித்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்ட அரங்கில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, வணிக வரித்துறையில் 2024–25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த நிதியாண்டைவிட ரூ.3,727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
வணிகவரித்துறை அலுவலர்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் ரூ.1,040 கோடி போலி உள்ளீட்டு வரியை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகளை ரத்துசெய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பணித்திறனாய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களிடம் எடுத்துக்கூறி வரி வருவாயை அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் கோட்டத்திற்கு உட்பட்ட நிலுவையில் உள்ள கோப்புகளை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், தரவுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய அதிநவீன மென்பொருள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜெகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) ரத்தினசாமி மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான சென்னை மணலியை சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு குடும்ப நல நிதியாக ரூ.3 லட்சத்தை அமைச்சர் வழங்கினார்.