டெல்லி, பிப். 04–
மோடி பிரதமராக வேண்டும் என்று 64 சதவீதம் பேரும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேரும், வேறு யாராவது என 19 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு உத்திகளை பாஜக கையில் எடுத்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. யார் பிரதமர் வேடாளராக அறிவிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
யாருக்கு எத்தனை சதம்?
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டைம்ஸ் நவ்-இடிஜி ஆய்வுக் கணக்கெடுப்பின்படி, பிரதமர் பதவிக்கு 64% பேரின் முதன்மைத் தேர்வாக நரேந்திர மோடியும், 17 சதவீதம் பேர் ராகுல் காந்தியும் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்றும் தங்களது முதன்மைத் தேர்வாகத் தேர்ந்தெடுத்தனர். இதை தவிர்த்து 19 சதவீதம் பேர் ‘வேறு சிலருக்கு’ வாக்களித்துள்ளனர்.
பிரதமர் தகுதி இருப்பவர் என்று தாங்கள் நம்பும் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது, மொத்தம் 19% பேர் ராகுல் காந்தியை தேர்வு செய்தனர்.15% பேர் மம்தா பானர்ஜியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 12% பேர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், 6% பேர் மு.க. ஸ்டாலினையும், 8% பேர் உத்தவ் தாக்கரேவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். கணக்கெடுப்பில் மொத்தம் 40% பேர் இவர்கள் யாரும் இல்லை என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளனர் என அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது. மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தகுதி பெற்ற 90 கோடி மக்களில் 67 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.