ஆர். முத்துக்குமார்
சமீபத்து ஜோ பைடன் , டொனால்ட் டிரம்ப்புக்கு இடையேயான ஜனாதிபதி விவாதம் 2024 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் அமரப்போகிறவரை தேர்ந்தெடுக்கும் இறுதிக் கட்டப் போட்டிக்கான களத்தை அமைத்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலையில் குடியரசுக் கட்சி மாநாடு, ஆகஸ்டில் ஜனநாயக மாநாடு மற்றும் செப்டம்பர் 10 அன்று மற்றொரு விவாதம் போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் பிரச்சார சீசன் களைகட்டுகிறது.
நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய ஆய்வின்படி, தற்சமயம் தேர்தல் நடத்தப்பட்டால் பைடனின் 226 வாக்குகளுடன் ஒப்பிடும்போது டிரம்ப் 312 வாக்குகளைப் பெற்று வென்று விடுவார்.
தோல்வியின் விளிம்பில் உள்ள மாநிலங்கள் பைடன்னுக்கு சாதகமாக மாறினால் மட்டுமே தேவையான 270 தேர்தல் வாக்குகளைப் பெற முடியும்.
ஒருவேளை டிரம்பிற்கு ஆதரவாக மாறினால் அவர் தனது முன்னணியை மேலும் விரிவுபடுத்துவார்.
ஆக இது டிரம்பிற்கு தற்போதைய வெற்றி கனி அவருக்கு காத்து இருப்பதை புரிய வைக்கிறது.
சர்ச்சைக்குரிய டிரம்ப் தான் மிக வலுவான போட்டியாளராக இருப்பதை அரசியல் நிபுணர்கள் ஏற்க ஆரம்பித்து வருகிறார்கள்.
டிரம்ப் – ஜனவரி 6, 2021, கேபிடல் கலவரத்தைத் தொடர்ந்து இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட அவமானத்துடன் பதவியில் இருந்து வெளியேறிய ஒரே ஜனாதிபதி இவர்தான்.டிரம்பின் வெற்றிக்கான அறிகுறிகளுக்கு சில உண்மைகள் கண்முன் இருப்பதே நிதர்சனம்.
குறிப்பாக ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் ஏற்படுத்தி வரும் வாக்குப் பிரிப்பு பைடனுக்கு தோல்வியை எதிரோலிக்கிறது.
எஃப். கென்னடி ஜூனியர் மிகவும் பிரபலமான அரசியல் குடும்பத்தின் பிரதிநிதி ஆவார். சுத்தமான நீர் போன்ற சுற்றுச்சூழல் காரணங்களுக்காக போராடிய ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் என தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கினார்.
அவரது மாமா ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி ஆவார். அவரது தந்தை அட்டர்னி ஜெனரலாகவும் அமெரிக்க செனட்டராகவும் பதவி வகித்தவர், ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை நாடினார். இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
2020 இல் இவரது செல்வாக்கு பெரும்பாலும் பைடனுக்கு ஆதரவாக இருந்தது! பாவம் டிரம்ப்.
ஆனால் இம்முறையோ அவரது செல்வாக்கு பையடனுக்கு மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்க வைத்து வருகிறது.
ஆட்சியில் இருக்கும் ஒரு தலைவரின் சிம்ம சொப்பனமாக இருப்பது ஆட்சியாளின் மீது எதிர்ப்பலை அதாவது Anti Incumbency.
அதில் பைடன் மிகப் பின் தங்கியே இருக்கிறார். 40 சதவீதத்திற்கும் குறைவான ஒப்புதல் மதிப்பீட்டைக் மட்டுமே பைடன் பெற்று இருக்கிறார்! அதாவது எதிர்ப்பு 60 சதவீதம்!
இது பைடனுக்கு தோல்விக்கான எச்சரிக்கை மணி. காரணம் 1930களில் இருந்து பதவியில் இருந்த ஃபோர்டு, கார்ட்டர், புஷ் மற்றும் டிரம்ப் ஆகிய அனைவரும் தேர்தல் ஆண்டின் ஜூன் மாதத்தில் 45 சதவீதத்திற்கும் குறைவான ஒப்புதல் மதிப்பீடுகளுடன் மீண்டும் தேர்தலில் நின்ற போது படுதோல்வியடைந்துள்ளனர் என்பதே வரலாறு.
அரசியல் சர்ச்சைக்குரிய டிரம்ப், உறுதியான போட்டியாளராகவே உள்ளார். அவரது ஜனரஞ்சக பேச்சுக்கள் மற்றும் வணிக புத்திசாலித்தனம் மற்றும் சர்வதேச அரசியலில் நாட்டோ மீது நம்பிக்கையில்லை என்ற நிலைபாடு, உக்ரைன் மீது கோபம், ரஷியா மீது தாக்குதல்களை நிறுத்திவிடுவது பற்றிய அறிவிப்புகள் அமெரிக்க வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ஆனால் ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்பின் மீது நம்பிக்கை கிடையாது என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்! காரணம் டிரம்பின் போக்கு கோமாளித்தனமாக இருப்பதாக கூறி இருக்கிறார். சொன்னதை செய்யாமல் தப்பித்து விட்டு வேறு குழப்பங்களை ஏற்படுத்துவார் என எச்சரிக்கிறார்.
ஆனால் பைடன் தப்போ சரியோ சொன்னதை செய்வார் என உறுதியாக நம்புகிறார்.
ஆக 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மிகவும் பரபரப்பான போட்டியாகவே மாறிவிட்டது. உலகமே மிக உன்னிப்பாக கவனிக்கும் நடப்பாக மாறிவிட்டது.
உலகப் பார்வையில் எப்படி இருந்தாலும் இந்தியா இந்தத் தேர்தல் முடிவு பெரிய ஏமாற்றமாக இருக்காது காரணம் யார் வென்று ஆட்சியை பிடித்தாலும் நன்மையடையும் நிலைமையில் தான் உள்ளது.
பைடன் அதிபர் பதவியை தக்கவைத்துக் கொண்டால் தற்போதைய வலுவான அமெரிக்க-இந்திய உறவு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வாஷிங்டனுக்கு மோடி அதிகாரப்பூர்வ அரசுப் பயணம் சென்றபோது , பெரும் வரவேற்பும் மற்றும் காங்கிரஸில் உரையாற்றும் வாய்ப்பும் பெற்றார். இவை இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இராஜீய மற்றும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி அவர் ஒரு வித்தியாசமான தலைவர் என்று முன்னர் பாராட்டிய நிகழ்வுகள் காரணமாக சாதகமான நிலைப்பாட்டின் தொடர்ச்சியைக் காணலாம்.
டிரம்பின் 2020 இந்தியா விஜயத்தின் போது இரு தலைவர்களுக்கிடையிலான வலுவான உறவை எடுத்துக்காட்டும் வகையில் மோடியுடன் இணைந்து அவருக்கு அன்புடன் வரவேற்பு தந்தது மறக்க முடியாத அரசியல் நிகழ்வாகும்; பின்னர் அமெரிக்க மண்ணில் டிரம்புக்கு இந்தியர்களிடையே எழுச்சிமிகு வரவேற்பு கூட்டத்தை நடத்தியதும் அரசியல் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இவை அவ்விரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நல்ல உறவைக் காட்டியது.
மீண்டும் அதே நல்லுறவுகள் தொடர்வதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்ப்போம்.