செய்திகள்

2023 ஆம் ஆண்டின் பேசுபொருளாக இருந்து முத்தான சாதனைகள் செய்த 10 பெண்கள்

Makkal Kural Official

மகளிரின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் – “மக்கள் குரல்”


“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி…” என்று பாரதி பாடினான். அந்த வகையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். மானுட முன்னேற்றத்தில் இன்று “பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை; பெண்களின் பங்களிப்பு இல்லை என்றால் அது மானுடத்துக்கான துறையே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு, பெண்களின் பங்களிப்பு அங்கிங்கெனாதபடி இருந்து வருகிறது. அறிவாற்றல் மற்றும் துணிச்சலோடு மட்டுமின்றி, பெரும் பாய்ச்சலோடும் பங்காற்றுவதன் மூலம் தாங்களும் முன்னேறி, நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உலகின் தொன்மை காலம் தொட்டு, மானுட சமூகம் – தாய் வழி சமூகமாகவே இருந்தது. அதன் நீட்சியாக திராவிட இனம், தாய் வழி மரபை சங்க காலம் வரையில் போற்றி பாதுகாத்து வந்துள்ளது சங்க கால பாடல்களின் மூலம் வெளிப்படுகிறது. அதனால் தான், தமிழர்கள் இன்றும் தாங்கள் போற்றும் அனைத்தையும் பெண் பாலாய் பார்க்கிறார்கள். நாட்டை தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், வேளாண்மை செழிக்க பயன்படும் ஆறுகளுக்கு கூட, காவேரி, பொன்னி, பவானி என பெண்பாற் பெயர்களையே சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

ஆனால் ஆரியர் பண்பாட்டுப் படையெடுப்புக்கு பிறகே, தமிழ் சமூகம் ஆரியமய சடங்குகளை பின்பற்றி, ஆண் மைய சமூகமானது. இன்றும் ஜெர்மனியர் உள்ளிட்ட ஆரியர்கள் தங்கள் நாட்டை தந்தையர் நாடென்றே கூறுகின்றனர். இந்த பார்வையை பாட்டுக்கொரு புலவன் என்று நாம் போற்றும் பாரதியிடமே காண முடியும். அதன் வெளிப்பாடாக தனது பாடலில், “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது, ஆரியர்களின் தந்தைவழிச் சமூகமுறை என்பதை புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் இயக்க கூற்றையொட்டி ஒன்றை சொல்ல வேண்டுமானால், பெண்களால் சாதிக்க முடியாத எதையும் ஆண்களால் சாதித்து விட முடியாது. ஆனால் ஆண்கள் செய்ய முடியாததையும் பெண்களால் செய்ய முடியும் என்பது தான் அந்த நியதி. அந்த வகையில் கடந்த 2023 ஆண்டில் பல்வேறு துறைகளிலும் பெண்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, பேசுபொருளாக விளங்கி உள்ளார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முத்தான சாதனைகள் படைத்த 10 பெண்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். ஆயிரமாயிரம் பெண்கள் வெளியில் தெரியாமல் சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் இங்கு குறிப்பிட முடியாததால், அவர்களின் சார்பாக 10 பேரை பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம், சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களின் சாதனை பங்களிப்பை அங்கீகாரித்து, “மக்கள் குரல்” சார்பாக இதனை வெளியிடுகிறோம்.

சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயர் பிரியா

மேயர் என்பதை “மாநகர தந்தை” என்ற பெயரில் அழைப்பது வழக்கம். அண்மை காலத்தில் சென்னை மாநகர தந்தையை மட்டுமே பார்த்து வந்த நிலையில், “சென்னை மாநகர தாய்” என்ற பெரும் பொறுப்புக்கு 29 வயதே ஆன, பிரியா வந்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலேயே மேயராக பொறுப்பேற்றபோது, பலருக்கும் ஒரு அய்யம் இருந்தது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன். சைதை துரைசாமி என்று, அண்மை காலத்தில் பிரபலங்கள் அலங்கரித்த பதவியை ஒரு சிறு பெண்ணால் நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

ஆனால், அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக, தற்போது சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக கடந்த ஆண்டு பதவியேற்றார் பிரியா. பதவி ஏற்ற நாள் முதலாக, சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்வது தொடங்கி ஓயாமல் உழைத்து வருகிறார் பிரியா, என்பதை சென்னை மாநகராட்சியை சேர்த்த பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் வடகிழக்கு மழைக்காலங்களில் தொடங்கி தற்போதைய மிக் ஜாம் புயல் வெள்ளம் வரை இவர் மழை உறை அணிந்து கொண்டு, இரவு பகல் பாராமல் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மக்கள் இன்னல் படும் வேளையில் மக்களோடு நின்று நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற மக்களாட்சி கோட்பாட்டின் அடிப்படையில், புயல் வெள்ளத்தில் ஆண்களே இறங்கி வேலை செய்ய தயங்கும் நிலையில், தேங்கி நிற்கும் புயல் மழை வெள்ளத்தை அகற்ற, சுற்றிச் சுழன்று பணிகளை முடுக்கி விட்டு மக்களிடம் பாராட்டு பெற்றார்.

மேலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தி தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றி வருகிறார். இவர் வயதில் சிறியவர், இவர் சென்னை போன்ற பெருமாநகரில் மேயராக தாக்குப்பிடிப்பாரா? என்ற விமர்சனங்களை தவிடு பொடியாக்கி, தனது பணிகளை செவ்வனே செய்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ள சென்னை பெரு மாநகர தாயாக வலம் வரும் சென்னை மேயர் பிரியா, சாதனைப் பெண்கள் 10 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ ,விண்ணில் செலுத்திய சந்திரயான்-3, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய 10 நாள்களில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் திட்ட இயக்குநராக தமிழகத்தின் தென்கோடியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி வெற்றிகரமாகத் தன் பணியை நிறைவேற்றியிருக்கிறார்.

ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநர் விஞ்ஞானி நிகர் ஷாஜி

59 வயதான நிகர் ஷாஜி, தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் பிறந்தவர். எஸ்.ஆர்.எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியைப் பெற்ற இவர் 10 ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடமும் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்புகளில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மேஸ்ராவில் மின்னணுவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல திட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ந்தேதி அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை பெண்ணாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளதான் மூலம் இந்த பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

தடகள மங்கை கோவை வித்யா 

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் சாதித்துள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் அரையிறுதியில் தங்க மங்கை பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த அவர் இறுதிப்போட்டியில் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (வயது 63) – மீனா (வயது 59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது. இருவரும் இணைந்து தடகள போட்டிகளில் பங்கேற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் அரையிறுதியில் இந்தியாவின் ‘தங்க மங்கை’ என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை, 39 ஆண்டுகளுக்குப் பின் சமன் செய்தார்.

அதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, 400 மீட்டர் பந்தய தூரத்தை 55.68 விநாடிகளில் கடந்த வித்யா ராம்ராஜ் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்று புகழ் பெற்றார். இதன் மூலம், மக்கள் குரல் சார்பான தமிழ்நாட்டின் 10 சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

காபி வித் கலெக்டர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் மெர்சி ரம்யா 2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியை முடித்து விழுப்புரம், குமரி மாவட்டங்களில் உதவி மற்றும் துணை ஆட்சியராகப் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து வணிகவரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றி உள்ளார்.

மாவட்டத்தை சிறப்புடன் நிர்வகிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் இவரின் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த புதுமையான நிகழ்ச்சியில் இனிப்பு, கார வகைகளை சாப்பிட்டு கொண்டே அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சியருடன் உரையாடினர்.

அப்போது உங்களை ஐ.ஏ.எஸ் ஆக தூண்டியது என மாணவர்கள் கேட்டக இதற்கு, ஆட்சியர் மெர்சி ரம்யா, பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றால் கலெக்டராக ஆக வேண்டும் என்று சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கமே என்னை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கியது என்று வேடிக்கையாக பதில் அளித்தார்.

மேலும் புதுக்கோட்டையில் அண்மையில் புத்தகத் திருவிழா நடந்தது. இதன் ஒரு பகுதியாக, புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது.

புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் மெர்சி ரம்யா, மாணவிகளோடு மாணவியாக தரையில் அமர்ந்து தான் எடுத்து வந்திருந்த புத்தகத்தை வாசித்தார். ஆட்சியரின் இந்தச் செயல் மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. புதுமை சிந்தனையுடன் மக்கள் நலனை கருதும் புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா, நமது சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

சைக்கிள் ரோந்து– டிஐஜி ரம்யா பாரதி

மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி ஐபிஎஸ்

மதுரை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரம்யா பாரதி ஐபிஎஸ், சைக்கிளில் ரோந்து பணி, நைட் விசிட் மேற்கொண்டு வருகிறார். சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றிய இவர் சாதாரண உடையில் நள்ளிரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சென்னையில் சைக்கிளில் நைட் ரவுண்ட்ஸ் சென்று வந்த ரம்யா பாரதியை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் நகரில் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில், காவல் துறையினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதாக ரம்யா பாரதி தெரிவித்திருந்தார்.

மேலும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை பாதுகாக்க புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தென் மண்டலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள், சொத்துகள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இவர் ஜாதியை மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு பணிகளின்போது பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுத்து வரும் இவரை மக்கள் வாழ்த்தி வருகின்றனர். மக்களோடு கலந்து, மக்களின் நன்மதிப்பை சாம்பாதித்துள்ள ரம்யா பாரதி, மக்கள் குரலின் சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

எவரெஸ்ட் தொட்ட முத்தமிழ் செல்வி

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் முத்தமிழ் செல்வி. விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட முத்தமிழ் செல்வி, வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட, 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து‌ 1,389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் முத்தமிழ் செல்வி

இவர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் மலையிலிருந்து இறங்கி சாதனை படைத்தார்.

பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு கீழே நடந்து வந்தார். இந்த சாதனையை 55 நிமிடங்களில் முத்தமிழ் செல்வி முடித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட மலை ஏறும் குழுவினருடன் இணைந்து, உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார் முத்தமிழ்ச்செல்வி. தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்னும் சாதனை படைத்துள்ளதன் மூலம் மக்கள் குரலின் சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

குப்பைக்காரி ஆன்

சமூக நிறுவனம் (social enterprise) என்ற நோக்கத்துடன், கழிவுகள் 360 தீர்வுகள் (wasted 360 solutions) என்ற பெயரில் சென்னை, பெங்களுரு நகரங்களில் குப்பைகளை சேகரித்து, அதனை பிரித்தெடுத்து, அதில் புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றி, நகரின் தூய்மைக்கும் துணை புரிந்து வருகிறார் நடிகை ஆன். கமல் நடித்த அவ்வை சண்முகி படத்தில் மீனாவின் மகளாக வந்த குட்டிப் பெண், தற்போது வளர்ந்து குப்பை சேவையை செய்து வருகிறார்.

நடிகை ஆன்

“நிலையான தீர்வுகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்ற கருப்பொருளை கொண்டு செயல்படும் நடிகை ஆன், குப்பைகள் சேகரிப்பின் மூலம் 13 க்கும் மேற்பட்ட பணிகளை ஏற்படுத்தியுள்ளார். மேலும் திருமண விழாக்கள், பெரிய குடியிருப்பு வளாகங்களில் சேரும் குப்பைகள் போன்றவற்றை சேகரித்து பணி செய்து வருகிறார்.

குப்பைகளில் செய்யப்பட்ட நாற்காலி, மேசை போன்ற வீட்டு பயன்பாட்டு பொருட்களையும் சந்தைப்படுத்தும் ஆன், வீணடிக்கப்படும் தரமான பழைய துணிகளை வாங்கி, அதனை சலவை செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். ஒரு சிகரெட்டின் அடிப்பகுதியில் இருக்கும் பஞ்சுபோன்ற பகுதி கழிவானது 5000 லிட்டர் நீரை அசுத்தப்படுத்த கூடியது என்ற அபாயத்தை விளக்கி, அந்த கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதன் மூலம் மெத்தைகள், பொம்மைகள் செய்து விற்பனை செய்ய துணை புரிகிறார். அதேபோல், கோயில் விழாக்களில், கோயம்பேடு மார்க்கெட்களில் வீணடிக்கப்படும் பூக்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க, அதனை சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்துகிறார்.

தன்னை குப்பைக்காரி என்று அழைத்துக்கொள்ளும் ஆன் (Ann), சுற்றுச்சூழல் காப்பில் முன்னோடியாக இருப்பதுடன், பல்வேறு நிறுவனங்கள் நிகழ்வுகளில் சேரும் குப்பைகளை வாங்கி தரம் பிரித்து, அதனை மறுசுழற்றி செய்து வருகிறார். இதன் மூலம் சமூகத்துக்கு சேவை செய்வதுடன் புதிய தொழில்வாய்ப்பை கண்டறிந்து செயல்படும் ஆன், மக்கள் குரலின் சாதனைப் பெண்கள் பட்டியலில் இடும் பிடித்துள்ளார்.

வழக்கறிஞர் மதிவதனி

பொதுவாக பெண்கள் பேசுவதில் கெட்டிக்காரர்கள் என்று சொல்வார்கள். ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை பெரும்பாலும் வெட்டிப்பேச்சு பேசுபவர்களாகவே தொலைக்காட்சி நாடகங்களில் நாம் பார்க்க முடியும். ஆனால், கருத்தாழம் மிக்க பேச்சுகளை இயக்க மேடைகளில் பேசுவது எளிதான ஒன்றல்ல. அந்த வகையில் இளம் வயதிலேயே கொள்கை முழக்கம் செய்து வரும் வழக்கறிஞர் மதிவதனி, வலையொளி பார்க்கும் கல்லூரி மாணவிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

திராவிடர் கழகத்தில் துணைப்பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி

தொலைக்காட்சி விவாதங்களில் ஆகட்டும், வலையொளி பேட்டிகளாகட்டும், கருத்தரங்கம், மேடைப்பேச்சு ஆகியவற்றில், மிகவும் அமைதியாக அனைவர் சொல்வதையும் கேட்டுக்கொண்டு, மிக லாவகமாக தனது பதிலை தெளிவாக எடுத்துவைப்பதில் வழக்கறிஞர் மதிவதினி பலராலும் பாராட்டை பெற்று உள்ளார். அதிலும் பெண்ணிய சிந்தனைகள், குறிப்பாக தந்தை பெரியாரிய சிந்தனைகளை இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் மிக அழகுற பதிய செய்வதில் வல்லவராக இருக்கிறார்.

அதனாலேயே, தந்தை பெரியார் தொடங்கிய பழம்பெரும் இயக்கமான திராவிடர் கழகத்தில் துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை இத்தனை இளம் வயதிலேயே பெற்றுள்ளார். அதன் மூலம் பலரது கவனத்தையும் பாராட்டையும் வழக்கறிஞர் சே.மெ. மதிவதனி பெற்றுள்ளார். இளம் வயதில் தனது பேச்சாற்றல், கருத்தாற்றல் மூலம் பெரும் புகழ் பெற்றுள்ள மதிவதனி, மக்கள் குரலின் 10 சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

உயிர் வளர்க்கும் உமாராணி

ஏழைகளுக்கு உணவளித்து, உயிர் வளர்ப்பது பெரும் தொண்டு. தாயுள்ளம் கொண்டு, இந்த அறப் பணிகளை செய்வது உடன் வாழும் சமூகத்தின் மீதான பெரும் அக்கறை என்றே சொல்ல வேண்டும்.

“உமாராணி தவமொழி அறக்கட்டளை” உமாராணி

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. “

என்பது திருமூலரின் வாக்கு…

அந்த வகையில், சென்னை கீழக்கட்டளையை சேர்ந்த உமாராணி, “உமாராணி தவமொழி அறக்கட்டளை” என்னும் பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இலவச உணவு வழங்கி வருகிறார். 150 முதல் 200 பேருக்கு உணவு வழங்கி வரும் உமாராணி, உடல் நிலை குன்றிய முதியோர்களை வைத்து பராமரித்தும் வருகிறார்.

முதியோர் பராமரிப்பு மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு வழங்கி வருவதன் மூலம், இவர் மக்களிடையே ஒரு சாதனை பெண்ணாக திகழ்ந்து வருகிறார். அதன் மூலம் மக்கள் குரலின் சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

600 க்கு 600 வாங்கி சாதித்த மாணவி

2023 ஆம் ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 8.50 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், அதில், 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தினர். தேர்வு முடிவு வெளியானதை அடுத்து பெரும் பேசுபொருளாக மாறினார் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி.

2023 ஆம் ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 600 க்கு 600 வாங்கி சாதித்த நந்தினி

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொறியியல் அறிவியல், பொருளாதாரம், கணக்கியல், கணினி பயன்பாடு ஆகிய 6 படங்களிலும் அவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் குடும்பத்துடன் சென்று முதலமைச்சரை சந்தித்து மாணவி நந்தினி வாழ்த்து பெற்றார். அவருக்கு சாக்லேட் பெட்டிகளை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துடன், படிப்புக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்து தர ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தார்.

நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக இருக்கிறார். அவரது தாயார் பால பிரியா. இவர் ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் பெரும் சாதனை படைத்த மாணவி நந்தினியும் நமது சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


–மா.இளஞ்செழியன்.

–சுப்ரிஜா சிவக்குமார்

–ஷீலா பாலச்சந்திரன்


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *