3.60 கோடி பேரிடம் ரூ.2,200 கோடி அபராதம்
டெல்லி, மே 27–
ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 3 கோடியே 60 லட்சம் பேரிடம் இருந்து ரூ.2,200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடமிருந்து ரெயில்வே நிர்வாகம் அபராதம் வசூலித்து வருகிறது. பொதுவாக ரெயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார்.
அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த அபராதத் தொகையையும் பயணி செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். அந்த வகையில், கடந்த நிதியாண்டில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களின் விவரங்கள் மற்றும் அபராதத்தொகை குறித்து, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார் கேட்டிருந்தார்.
3 கோடியே 60 லட்சம் பேர்
அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த தகவலில், 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3 கோடியே 60 லட்சம் பேர் பயணித்ததாகவும், அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதாவது 2021-22-ம் ஆண்டில் 2.70 கோடி பேர் டிக்கெட் இன்றி பயணித்துள்ளனர். அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு டிக்கெட் இன்றி பயணித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடி அளவிற்கும், அபராதத்தொகை ரூ.700 கோடியும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.