வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
டெல்லி, பிப். 11–
இதுவரை இல்லாத அளவிற்கு 2022 ஆண்டில் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய குடியுரிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அதன்படி, 2022 இல் மட்டும் 2 லட்சத்து 25,620 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை வேண்டாம் என்று துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். ஓர் ஆண்டில் 2 லட்சத்தை கடப்பது இதுவே முதல்முறை.
வெளியேறிய 16 லட்சம் பேர்
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்திய குடியுரிமையை வேண்டாம் எனத் துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். ஆண்டு வாரியாக பார்க்கையில் 2011ஆம் ஆண்டில் 1,22,819 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்த நிலையில், 2015 இல் 1,31,489 பேரும் 2016இல் 1,41,603 பேரும் 2017இல் 1,33,049 பேரும் 2018 இல் 1,34,561 பேரும் 2019 இல் 1,44,017 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர்.
கோவிட் லாக்டவுன் காலமான 2020 இல் ஒரு லட்சத்துக்கும் குறைவாக 85,256 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். பின்னர் அடுத்தாண்டான 2021 இல் 1,63,370 பேர் இந்திய குடியுரிமை துறந்து வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆண்டுகளில் மொத்தம் 16 லட்சத்து 63,440 பேர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
அண்மை காலமாகவே இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பல இந்தியர்கள் அமெரிக்காவின் எச்1பி விசாக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் இந்த எண்ணிக்கை வருகாலத்தில் தொடர்ந்து உயரும் எனக் கூறப்படுகிறது.