செய்திகள்

2021–லும் வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி காண்போம்

தண்டையார்பேட்டையில் பேரவை உறுப்பினர் சேர்ப்பு முகாம்

2021–லும் வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி காண்போம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூளுரை

சென்னை, செப்.20

2021 லும் வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி காண்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சூளுரைத்தனர்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அம்மா பேரவை சார்பில் தண்டையார்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் அம்மா பேரவை உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம், மற்றும் ஆலோசனை கூட்டம் கழக அம்மா பேரவை செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் படிவங்கள் வழங்கப்பட்டது.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

50 ஆண்டு கால கழக வரலாற்றில் அண்ணா தொழிற்சங்கத்திற்கு தனி கொடி, தனி உறுப்பினர் என தனி அமைப்பாக இருந்து வந்தது. அதே போன்று எம்ஜிஆர் இளைஞர் அணி, ஜெயலிலதா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆகியவற்றிற்கும் தனித்தனியாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டதன்அடிப்படையில், ஜெயலலிதா பேரவைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கட்சியில் தனி அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த முடிவை முதல்வரும், துணை முதல்வரும் எடுத்துள்ளனர்.

ஜெயலலிதா செய்த சாதனைகளையும், தற்போது முதல்வர், துணை முதல்வர் செய்து வரும் நல்ல பல பணிகளும் திட்டங்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே இளைஞர்களும் மாணவர்களும் அண்ணா திமுகவில் அணியணியாக இணைந்து வருகின்றனர்.

அண்ணா திமுகவில் கிட்டதட்ட ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஜெயலலிதா பேரவையில் உறுப்பினர்களை சேர்க்க வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் தனிமனித இடைவெளியுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இது போன்ற நிகழ்ச்சிகள் அண்ணா திமுக சார்பில் நடத்தப்படுகிறது. அண்ணா திமுகவில் இணையும் இளைஞர்கள், மாணவ செல்வங்கள் முதல்வர், துணை முதல்வருக்கும் அரசுக்கும் வலுசேர்க்கும் வகையில் அரசின் சாதனைகளை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்.

தி.மு.க.வின் நாடகம்

நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போதே முதல்வர் இபிஎஸ் தனது ஆணித்தரமான கருத்தை ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நீட் எனும் கொடிய பாம்பு நுழைவதற்கு காரணம், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் என்றும், நீட் எனும் பாம்பு தமிழகத்தில் நுழையும் போதே அதனை நுழைய விடாமல் தடுத்திருந்தால் தற்போது தமிழக மாணவர்களுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சட்டசபையில் உரிய விளக்கத்தை அளித்துள்ளார்.ஆனால் நீட் எனும் கொடிய பாம்பை தமிழகத்தில் நுழைய செய்து விட்டு, தற்போது கடிக்கிறது, கொத்துகிறது என பாசாங்கு நாடகம் நடத்துவதை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள். மாணவர்களுக்கு நீட் விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக தான் என்பதை முதல்வர் இபிஎஸ் சட்டசபையில் தனது உரையின் மூலம் தோலுரித்து காட்டியுள்ளார். ஆகவே நீட் விவகாரத்தில் பாசாங்கு நாடகம் நடத்தும் திமுகவின் செயலை மாணவர்கள் நம்பவில்லை.முதல்வரும், அமைச்சரும் அளித்த ஆணித்தரமான விளக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு, தற்போது முப்பெரும் விழா என்ற பெயரில் அரங்கில் உட்கார்ந்து கொண்டு மீண்டும் நீட் தேர்வு தொடர்பாக பேசி திமுக கபட நாடகம் ஆடுவதை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. மாணவர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து விட்டு, தற்போது தும்பை விட்டு வாலை பிடிக்கின்ற வேலையை திமுக செய்துவருவதை முதல்வர் இபிஎஸ் அம்பலப்படுத்தி விட்டார்,

தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது கட்டுக்குள் உள்ளது, உலகிலேயே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே போன்று நாளொன்று 82 ஆயிரம் வரை அதிகமான பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமும் தமிழகம் தான்.

மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகப்படியாக இருந்த காலக்கட்டத்தில் உரிய நேரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு மக்களை பாதுகாத்தது. தற்போது கூட மக்கள் அச்சமடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். தனி மனித இடைவெளி, முககவசம், கைகளை கழுவுதல், கிருமி நாசினி, பொதுஇடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்ப்பது போன்ற அரசின் வழிகாட்டுதலை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது

பின்னர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசியபோது,

கழக பணிக்கு ஆற்றலும், வலிமையும் மிகவும் முக்கியமானது ஆட்சி பீடத்தில் தனது ஆற்றலால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி. அவரின் சீர்மிகு பணியால் தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சியால் பல்வேறு தொழிற்சாலைகளை முதலீடு செய்ய உள்ளன.

ஏழை குடும்பங்களுக்கு வீடு, வீடாக சென்று நிவாரணம் வழங்கி தமிழக மக்களின் வாழ்வாதாரம் சிறக்க பாடுபடும் இயக்கமும் அண்ணா தி.மு.க. தான். காழ்புணர்ச்சியால் தி.மு.க.வினர் முன்னுக்கு பின் புறம்பாக கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். அண்ணா தி.மு.க. வில் கடைசி தொண்டன் இருக்கும்வரை அவர்களின் எண்ணம் நிறைவேறாது. ஆட்சிக்கும் வரமுடியாது.

கழகத்தில் பலனை எதிர்பார்க்காமல் சரியான முறையில் கடைமையை செய்ய வேண்டும். பலன் தானாக தேடிவரும். தாமதம் அடையலாம். ஆனால் சரியான நேரத்தில் அது வந்தடையும். அதற்கு உதாரணமாக விளங்குபவர் தற்போது வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள ஆர்.எஸ். ராஜேஷ், தான். முன்பு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக தனது பணி மூலம் தனது தலைமையில் நடைபெற்ற பேரவை பயிற்சி பட்டறையில் பயின்று சிறந்த மாணவனாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு கழகத்தில் ஆற்றல் மிக்க மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ளார்.

கட்சி பணிக்கு உண்மையாக வருபவர்களை ஊக்குவிக்கும் இயக்கம் தான் அண்ணா.தி.மு.க. புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சி பணியாற்ற அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மக்களின் நன்மதிப்பும் நம்பிக்கையும் பெற்று சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று 2021 ல் கழகம் வரலாற்று சாதனை படைக்க ஒன்றினைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என சூளுரைத்தார்.

ஆர்.எஸ். ராஜேஷ்

முன்னதாக ஆர்.எஸ்.ராஜேஷ் பேசிய போது…

அம்மாவின் தெய்வீக வழிபாட்டிலும் சரி கழக அம்மா பேரவை பணியிலும் சரி அமைச்சர் உதயகுமாரின் பணி பேரவைக்கு மிகவும் வலிமையானது.

முன்பு அம்மா பேரவையில் சிறப்பு பயிற்சி பெற்று கழக பணியில் ஈடுபட்டு முழு ஈடுபாட்டுடன் அர்பணித்தேன். அதன் காரணமாக கழகம் என்னை ஊக்குவித்து மாவட்ட செயலாளர் பதவி உயர்வு வழங்கியது.

கழக அம்மா பேரவைக்கு சிறப்பான துடிப்பான உறுப்பினர்களை சேர்த்து வரும் தேர்தலில் பணியை துவக்கிட வேண்டும். அதேப்போன்று மும்முரமாக செயல்படுபவரையே அம்மா பேரவைக்கு உறுப்பினராக சேர்த்தல் வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதி அம்மாவின் தொகுதி. அம்மா ஆசியால் வளர்க்கப்பட்ட தொண்டர்கள் ஒன்றிணைந்து கழக பணியாற்றி வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி பெற உறுதி ஏற்று வெற்றி கனியை அம்மா காலடியில் சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.

இதில் மாநில இணைச் செயலாளர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், அம்மா பேரவை முகில், ரமேஷ், பகுதி செயலாளர்கள் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஜெ.கே.ரமேஷ், டிஒய்கே.செந்தில், ஏ.கணேசன் மாவட்ட பேரவை செயலாளர் ஏ.டேவிட் ஞானசேகரன், வியாசை எம் இளங்கோவன், தனபால் நகர் சிவகுமார், எல்.எஸ். மகேஷ்குமார், பி.ஜே.பாஸ்கர், எம் விஜயகுமார், எம்.மகேந்திரமணி, ஆக்கம் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *